பாரதிய ஜனதாவின் மாநில செயற்குழு கூட்டத்தை நடத்த மூன்று இடங்களை அக்கட்சி தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இக்கூட்டமானது வரும் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் நடைபெறும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் ஹைதரபாத்தில் உள்ள சர்வதேச கன்வென்சன் ஹாலில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்எடுக்கப்படும் முடிவுகளை எப்படி அமல்படுத்துவது என்பது குறித்து விவாதிக்க மாநில செயற்குழு கூட்டம் வரும் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்துவது குறித்து அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் 19 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சி.டி ரவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தமிழகம் சார்பில் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு ஹைதரபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய செயற்குழு கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பே, தமிழக பாஜகவின் மாநில செயற்குழு கூட்டத்தை எங்கே நடத்தலாம் என்பது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாக தெரிகிறது. இதற்காக சென்னை, திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட மூன்று இடங்களை அக்கட்சி நிர்வாகிகள் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இம்முறை செயற்குழு கூட்டத்தை வட மாவட்டங்களில் நடத்த வேண்டும் என அண்ணாமலை விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநில செயற்குழு கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் இளைஞர்களுக்கு மக்களவை தேர்தலில் உரிய அங்கீகாரம் கொடுக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்குரிய நடவடிக்கைகள் செயற்குழுவிற்கு பின்னர் தொடங்கும் எனத் தெரிகிறது.
இராமானுஜம்.கி








