வாட்ஸ் அப் நிறுவனம் தந்திரம் செய்கிறது: மத்திய அரசு

வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தும் பயனாளர்கள் அந்நிறுவனத்தின் புதிய தனி நபர் சுதந்திர கொள்கையை ஏற்கச் செய்வதற்காக வாட்ஸ் அப் நிறுவனம் தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாட்ஸ்…

வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தும் பயனாளர்கள் அந்நிறுவனத்தின் புதிய தனி நபர் சுதந்திர கொள்கையை ஏற்கச் செய்வதற்காக வாட்ஸ் அப் நிறுவனம் தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப் செயலியில் புதிய தனி நபர் சுதந்திர கொள்கையை அறிமுகம் செய்ததிலிருந்தே வாட்ஸ்ஆப்பைச் சுற்றிப் பல சர்ச்சைகள் ஆரம்பித்தன.

வாட்ஸ்ஆப் செயலியின் இந்த புதிய கொள்கையால் பயனாளர்கள் அனுப்பும் செய்திகளின் பாதுகாப்புத் தன்மை, அந்தரங்கம் குறித்து பயனாளர்கள் அச்சம் தெரிவித்தனர். ஆனால், பயனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் அனைத்துமே பாதுகாப்பானவை என வாட்ஸ்ஆப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தும் பயனாளர்களின் தகவல்களை மூன்றாம் நபர் யாரும் படிக்கவோ, கேட்கவோ முடியாது என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் இதற்கு விளக்கம் அளித்தது.

இந்நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய தனி நபர் சுதந்திர கொள்கைக்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது விருப்பத் தேர்வு முறையை கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி டெல்லியைச் சேர்ந்த சீமா சிங் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் வாட்ஸ் அப் நிறுவனம் தங்களுடைய புதிய தனி நபர் சுதந்திர கொள்கையை ஏற்க செய்வதற்காக, பயனாளர்களுக்கு வாட்ஸ்ஆப் நிறுவனம் நாள் தோறும் விளம்பர குறுஞ்செய்திகளை அதிக அளவில் அனுப்பி வருவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.