குஷி பட சம்பளத்தில் எஸ்.ஜே.சூர்யா செய்த செயல் – நடிகர் மாரிமுத்து நெகிழ்ச்சி!

பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தன் முதல் சம்பளத்தில், உதவி இயக்குநர்களுக்கு செய்த செயலை நினைத்து நடிகர் மாரிமுத்து நெகிழ்ச்சியாக பேசினார். பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகர் அஜித் நடித்த வாலி படத்தை…

பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தன் முதல் சம்பளத்தில், உதவி இயக்குநர்களுக்கு செய்த செயலை நினைத்து நடிகர் மாரிமுத்து நெகிழ்ச்சியாக பேசினார்.

பிரபல நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகர் அஜித் நடித்த வாலி படத்தை 1999-ம் ஆண்டு இயக்கி, தமிழ் சினி உலகில் அறிமுகமானார். நடிகர் விஜய்யை வைத்து குஷி படத்தையும் இயக்கினார். அதனை தொடர்ந்து நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பல படங்களில், கதாநாயகனாக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா ஸ்பைடர், மெர்சல் மற்றும் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.

தமிழில் அபியும், நானும், மொழி, பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் தற்போது ‘பொம்மை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா கதாநாயகனாகவும், ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 16-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், படத்தின் புரோமோஷனுக்காக எஸ்.ஜே.சூர்யா பல்வேறு சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், பிரபல யூடியூப் சேனல் நேர்காணல் ஒன்றில் எஸ்.ஜே.சூர்யாவும், இயக்குநரும் நடிகருமான ஜி.மாரிமுத்துவும் கலந்துகொண்டனர்.

அப்போது மாரிமுத்து கூறியதாவது, ”நாங்கள் இருவரும் இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றினோம். எஸ்.ஜே.சூர்யா மிகச்சிறந்த உழைப்பாளி. அந்த உழைப்பைப் பார்த்த பின்புதான் நடிகர் அஜித், ’வாலி’ படத்திற்கான வாய்ப்பைக் கொடுத்தார். அதன்பின், விஜய் நடிப்பில் ’குஷி’ உருவானது. அப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவிற்கு சில லட்சங்கள் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. நானாக இருந்தால் அந்தப் பணத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டு வீட்டில் வைத்திருப்பேன்.

ஆனால், அவர் அட்வான்ஸ் தொகையை ஒரு பைக் விற்பனை நிறுவனத்தில் கட்டி, அவருடன் இருந்த எனக்கு, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட 7 உதவி இயக்குநர்களுக்கு இருசக்கர வாகனங்களை வாங்கிக்கொடுத்தார். நாங்கள் பஸ் மற்றும் சைக்கிள்களில் வந்து கஷ்டப்பட்டதைப் பார்த்து சூர்யா இதைச் செய்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இன்றும் அந்த பைக்கை வைத்திருக்கிறார்” என நினைவு கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.