காங்கிரஸ் கட்சியுடன் மக்கள் நீதி மய்யத்தை இணைக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்துள்ள மக்கள் நீதி மய்ய பொதுச்செயலாளர் அருணாச்சலம், புரளிகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார். அதிலும் குறிப்பாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடா யாத்திரை மேற்கொண்ட போதும் சரி, கர்நாடக தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்தபோதும் சரி, கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தது மட்டுமின்றி, ராகுல்காந்தியின் அழைப்பை ஏற்று நடிகர் கமல்ஹாசனும் அந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
ஏற்கனவே கமல்ஹாசனின் குடும்பம் காங்கிரசில் தீவிர பற்றுக்கொண்டவர்கள். இவரது தந்தை டி.சீனிவாசன் வழக்கறிஞர் என்ற போதிலும் காங்கிரஸில் தீவிர பற்றாளராக இருந்தவர். இதனால் தாத்தா மற்றும் தந்தையின் வழியை பின்பற்றி கமலும் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியுடன் நெருக்கமான நட்பு பாராட்டி வருகிறார்.
இந்த நிலையில், நீண்ட காலமாகவே காங்கிரஸ் கட்சியுடன், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி இணைய உள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதன் உண்மை தன்மை குறித்து அறிய நமது நியூஸ் 7 தமிழின் சென்னை மண்டல தலைலமை செய்தியாளர் இக்னேசியஸ் சிரில் தேவா, மக்கள் நீதி மய்ய பொதுச்செயலாளர் அருணாச்சலத்துடன் பிரத்யேக பேட்டி எடுத்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் மநீம இணைப்பா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அருணாச்சலம், கூட்டணி – தொண்டர்களின் மனநிலையை அறிந்து கமல் அறிவிப்பார் என கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், 2019, 2021 தேர்தல்களில் மநீம பலம் என்ன? பலவீனம் என்ன? என அறிந்துள்ளோம். பலத்தை மேம்படுத்துவதற்கும், பலவீனத்தை சீர்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் பயணம் செல்கிறது. 2024 தேர்தலை நோக்கி மட்டுமல்லாமல், நீண்ட பயணமாகவும், 2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து திட்டமிடல் மற்றும் பயணம் மேற்கொள்கிறோம். சென்னை முதல் கன்னியாகுமரி வரை என தமிழ்நாடு முழுவதும் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்கு வங்கி உள்ளது. அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தலுக்கான முன்னெடுப்பை எடுத்து வருகிறோம்.
சட்டமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்க திட்டமிடல்கள் நடைபெற்று வருகிறது. மய்ய கருத்துடன், தொலைநோக்கு சிந்தனையுடன் மக்கள் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி மநீம. வேறு கட்சியுடன் இணைப்பதற்காக தொடங்கப்பட்டது அல்ல. உலகம் முழுவதும் மய்ய சித்தாந்தத்தை பரப்புவதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் இது. வேறு இயக்கத்துடனான இணைப்பு ஒருபோதும் இல்லை. அதற்கான முன்னெடுப்பும் இல்லை.
நாடு தழுவிய அளவில் கட்சியை கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. புரளிகளை நம்ப வேண்டாம். நாடாளுமன்ற தேர்தலுக்கு நாட்கள் உள்ளன. முடிவை அறிவிக்க வேண்டிய தருணம் அல்ல. தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளே செல்கிறது. தொண்டர்களின் மனநிலையை அறிந்து கமல்ஹாசன் அறிவிப்பார் என தெரிவித்துளளார்.









