கிரிக்கெட் உலகில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை பதிவு செய்திருக்கிறது பிசிசிஐ. கிரிக்கெட் உலகில் வலிமையாக திகழ்த்துவரும் இந்திய கிரிக்கெட் வாரியம், தொடர்ந்து கிரிக்கெட் உலகை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஐசிசி அறிவிக்கும் future tour program இல் அடுத்த ஆண்டிலிருந்து ஐபிஎல்-க்கு இடம் ஒதுக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கோ, 10 ஆண்டுகளுக்கோ அணிகள் எங்கு சென்று விளையாட உள்ளன என்ற அறிவிப்பே future tour program. இந்தப் பட்டியலில் ஐபிஎல்-ஐ இணைத்திருப்பதன் மூலம் அந்த 2 மாத காலத்தில் வேற எந்த தொடரும் நடத்தப்படாது.
ஐபிஎல் தொடரில் இடம்பெறும் வெளிநாட்டு வீரர்கள் தொடரின் நடுவே தங்களது தேசிய அணிக்காக விளையாடச் செல்வது வழக்கமான ஒன்று. இதனால் ஐபிஎல் தொடருக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கவே இந்த உத்தியை கையில் எடுத்துள்ளது பிசிசிஐ. ஒரு உள்நாட்டுத் தொடருக்காக சர்வதேச கிரிக்கெட் தொடர்களை நிறுத்தி வைப்பது சரியா? என்ற கேள்வியை கிரிக்கெட் வல்லுநர்கள் முன் வைக்கின்றனர்.
இந்த அறிவிப்பானது இந்திய ரசிகர்களுக்கும் ஐபிஎல் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை தரக் கூடியதாக இருந்தாலும், கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்குமா என்ற ஐயம் எழுகிறது. ஏற்கனவே இதுபோன்ற டி20 தொடர்களின் வருகையால் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஈர்ப்பு இளைய சமுதாயத்திடம் குறைந்துவரும் வேளையில், இந்த அறிவிப்பு டெஸ்ட் கிரிக்கெட்டை மேலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளது.
மேலும் மற்ற நாடுகளும் தங்களது நாட்டில் நடக்கும் தொடர்களையும் future tour program-இல் இணைக்கச் சொல்லும் பட்சத்தில், சர்வதேச கிரிக்கெட்டின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு நாடு, அங்கு நடத்தப்படும் பணம் கொழிக்கும் தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே ஆட்டுவிக்கிறதா என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
-சந்தோஷ்








