மகாராஷ்ட்ராவில் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்தவருக்கு ஒன்றுக்கு 5 மடங்கு பணம் கிடைத்ததை அடுத்து பலரும் அந்த ஏடிஎம் மையத்தை முற்றுகையிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்ட்ராவின் நாக்பூர் அருகே உள்ள கப்பர்கேடா என்ற சிறு நகரத்தில் ஏடிஎம் மையம் ஒன்றுக்குச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர் 500 ரூபாய் எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு 2500 ரூபாய் கிடைத்துள்ளது. மீண்டும் முயற்சிக்க மீண்டும் அதேபோல் பணம் கிடைத்துள்ளது.
இதை அவர் அருகில் இருந்தவர்களிடம் சொல்ல அந்த செய்தி காட்டுத் தீயாக பரவி பலரும் அந்த ஏடிஎம் மையத்தை முற்றுகையிட்டு பணம் எடுக்கத் தொடங்கியுள்ளனர். மிக நீண்ட கியூவில் நின்று பணம் எடுத்த அனைவருக்குமே அவ்வாறு 5 மடங்கு பணம் கிடைத்துள்ளது.
இந்த தகவல் காவல்துறைக்கு தெரிய வர அவர்கள் அங்கு வந்து ஏடிஎம் மையத்தை மூடி, சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அங்கு வந்து ஏடிஎம் இயந்திரத்தை திறந்து பார்த்த வங்கி அதிகாரிகள், அதில் 100 ரூபாய் பண்தாள்கள் வைக்க வேண்டிய ட்ரேவில் 500 ரூபாய் பணத்தாள்கள் வைக்கப்பட்டதே இவ்வாறு 5 மடங்கு பணம் வர காரணம் என்பதை கண்டறிந்து அதை சரி செய்துள்ளனர்.
காவல்துறையினர் வந்ததால் தங்களுக்கு கிடைக்க இருந்த அதிர்ஷ்டம் கிடைக்காமல் போய்விட்டதாக புலம்பியவாறே பலரும் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளனர்.









