குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய கூட்டணி கட்சியின் வேட்பாளரான திரௌபதி முர்மு 540 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிகிறது. இதைதொடர்ந்து குடியரசு தலைவருக்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடைபெற்றது. இதில் 99.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி குடியரசு தலைவர் வேட்பயாளராக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் தரப்பில் யஷ்வந்த் சின்காவையும் களத்தில் போட்டியில் உள்ளனர். 18ம் தேதி நடைபெற்ற தேர்தலின் வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
வாக்குகள் எண்ண தொடங்கியது முதலே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் வேட்பாளரான திரௌபதி முர்மு முன்னிலை வகித்து வருகிறார். மொத்த உள்ள 748 வாக்குகளில் திரௌபதி முர்மு 540 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்த வாக்குகளின் மதிப்பு 3 லட்சத்து 78ஆயிரமாகும். இதேபோல் எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா 208 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வாக்குகளின் மதிப்பு 1 லட்சத்து 45 ஆயிரத்து 600 ஆகும்.
இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், இந்த தேசம் வரலாறு படைக்கப் போகிறது. நாட்டின் 15வது குடியரசுத் தலைவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். யாருக்கும் எந்த சந்தேகமும் மனதில் இல்லை. ஒடிசாவில் மிகவும் சாதாரண வீட்டில் இருந்து வந்த பழங்குடியின குடும்பத்தின் மகள் திரௌபதி முர்மு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் கிழக்கிந்தியாவில் முதன்முறையாக ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தம் முன்னுக்கு வருகிறது என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. அத்தகைய பின்னணியில் இருந்து ஒரு தலைவர் நாட்டின் உயரிய பதவியை அடைய இருக்கிறர். இது ஜனநாயகத்தின் சாதனை என்று கூறினார்.
திரௌபதி முர்மு தொடர்ந்து வெற்றி முகத்தில் இருப்பதால் ஓடிசாவில் உள்ள அவருடைய சொந்த ஊரில் உள்ள மக்கள் தற்போது வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளனர்.








