லண்டனில் ராகுல் பேசியது என்ன? எதிர்க்கட்சிகளின் கோரிக்கை என்ன? நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி….

அமெரிக்காவின் ஹிண்டன் பர்க் ஆய்வறிக்கை விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் பிரிட்டன் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசியதை ஆளும் பாஜகவும் கையில் எடுத்துக்கொண்டு, தொடரும் அமளியால் நாடாளுமன்ற அவைகள் செயல்படாமல், முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என்ன…

அமெரிக்காவின் ஹிண்டன் பர்க் ஆய்வறிக்கை விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் பிரிட்டன் கேம்ப்ரிஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேசியதை ஆளும் பாஜகவும் கையில் எடுத்துக்கொண்டு, தொடரும் அமளியால் நாடாளுமன்ற அவைகள் செயல்படாமல், முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என்ன தான் பிரச்னை…?

இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம்தேதி தொடங்கி பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாவது அமர்வு கடந்த 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பட்ஜெட் குறித்து விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு ஒப்புதல் பெறுவது, அதைத் தொடர்ந்து, முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. ஆன் லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் குறித்து திமுகவும், தங்கள் மாநிலம் சார்ந்த விவகாரங்களை எழுப்ப பல்வேறு கட்சியினரும் தயாராக வந்தனர்.

ஆனால், நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு, செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அதானி குழும நிறுவனம் தங்களது முதலீடு, கணக்குகளில் முறைகேடு செய்துள்ளதாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் சிலவற்றின் பங்குகளும் சரிந்தன. முதலீடுகளும் கேள்விக்குள்ளாகியுள்ளன. இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

’’இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் முழுமையாக தாக்கப்படுகின்றன. அவை ஆபத்தில் உள்ளன. தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இதற்கு மத்தியில் ஆளும் பாஜக-தான் காரணம்’’ என்று லண்டனில் பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தங்களின் கோரிக்கைகளை முன்வைத்து இருதரப்பும் தொடர் அமளியிலும் ஈடுபட்டும் வருகின்றன. இதையடுத்து, குடியரசு துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டமும் நடைபெற்றது.

மாநிலங்களவையில் 26, மக்களவையில் 9 என மொத்தம் 35 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை நிறைவேற்ற வேண்டும். எனவே அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் அமளி தொடர்கிறது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத் துறை அலுவலகம் வரை சென்று புகார் கொடுக்க, பேரணியாக சென்றதையும் பார்க்க முடிந்தது. சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளைப் தவறாகப் பயன்படுத்தி அச்சுறுத்தி வருகிறார்கள் என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் “ஒரு தொழிலதிபரைக் காப்பாற்ற, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிறது இந்த அரசு” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா கடுமையாக விமர்ச்சிக்கிறார். ’’ராகுல் காந்தியின் செயல்களால், காங்கிரஸ் கட்சியை அழிவுப்பாதைக்கு சென்றால், எங்களுக்கு கவலையில்லை. ஆனால், இந்தியாவைப் பற்றி அவதூறாக பேசுவதைப் பொருத்துக் கொள்ள முடியாது’’ என்கிறார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ.

ஆனால், ‘’நாட்டிற்கு எதிராக எதையும் பேசவில்லை. இது குறித்தும் என் மீதான குற்றச்சாட்டுக்கும் நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க விரும்புகிறேன். அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும்.’’ என்கிறார் ராகுல் காந்தி. அவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு, ’’ரிசர்வ் வங்கி சட்டப்படி அதானி நிறுவன கணக்கு குறித்த விபரங்களை வெளியிட முடியாது’’ என்று பதில் அளிக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

’அந்நிய நாட்டில் இந்தியாவை அவமதித்த ராகுல் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’ என்கிறது பாஜக. ’அதானி விவகாரத்தை மறைக்க ஆளும் கட்சியே அவை நடவடிக்கைளை திட்டமிட்டு முடக்கி வருகிறது’ என்கிறது காங்கிரஸ். இருதரப்பும் விடாப்பிடியாக தொடர்கின்றன.

இதனால், எந்த விவாதமும் நடத்தபடாமல், எதற்கும் தீர்வு கிடைக்காமல், மசோதாக்களும் நிறைவேறாமல், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் மட்டும் விரயமாகிக்கொண்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். விட்டுக் கொடுக்குமா ஆளும், ஆண்ட கட்சிகள் ? முடிவுக்கு வருமா அமளி…? ஆக்கப்பூர்வமாக செயலாற்றுவார்களா எம்.பிக்கள்…? காத்திருப்போம்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.