தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தனி கிரிக்கெட் மைதானம் அமைக்கும் எண்ணம் இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்.
நியூஸ் 7 தமிழின் சென்னை மண்டல தலைமை செய்தியாளர் சிரில் தேவா இக்னேசியஸ் நடத்திய கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்தார். இந்த கலந்துரையாடலின் போது அவர் மேலும் கூறியதாவது:
சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிய மாடம் அமைப்பதால் 39,000 பார்வையாளர்கள் கூடுதலாக அமரலாம். மாவட்டங்கள், நகரங்களில் கிரிக்கெட் சங்கங்கள் சார்பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டாலும், கிராமங்களில் நடத்த முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன், அணி சேர்த்து போட்டிகள் நடத்த வேண்டுமானால் மைதானங்கள் வேண்டும்.
Talent Scout ஆரம்பித்துள்ளதன் மூலம் மாவட்டங்களிலும் புதியதாக நிறைய கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளனர். வயல்களில் குச்சி, பேட் வைத்து வைத்து விளையாடி வந்தவன் தான். அதனுடைய கஷ்டங்கள் தெரியும்.
மேலும், சேப்பாக்கம் மைதானத்தை அரசிடமிருந்து குத்தகைக்கு எடுத்து தான் நடத்துகிறோம். கிரிக்கெட் சங்கத்திற்கென தனியாக கிரிக்கெட் மைதானம் அமைக்கும் எண்ணம் உள்ளது. சேலம், கோவையில் கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மைதானங்கள் அமைக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்தார்.







