நியமன எம்.பி.க்களின் உரிமை என்ன?

மாநிலங்களவை நியமன எம்.பி பதவிக்கான சலுகைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 233 பேர் மாநிலங்கள் மற்றும்…

மாநிலங்களவை நியமன எம்.பி பதவிக்கான சலுகைகள் என்ன? உரிமைகள் என்ன? என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். மீதியுள்ள 12 பேர் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். அதில், கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை, சமூக சேவை , பத்திரிகையாளர் எனப் பல தரப்பட்ட ஆளுமைகளின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்யும். குடியரசுத் தலைவர் மத்திய அரசின் பரிந்துரைகளை ஏற்று, அந்த பட்டியலில் உள்ளவர்கள் மாநிலங்களவை எம்.பியாக ஒப்புதல் வழங்கி அறிவிப்பார். குடியரசுத் தலைவர் மாளிகை நியமன எம்.பிக்கள் பெயரை வெளியிடும். பின்னர் அவர்கள், மாநிலங்களவைக்குத் தலைவர் பொறுப்பு வகிக்கும் குடியரசு துணைத் தலைவர் முன்னிலையில் மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பார்கள்.

மாநிலங்களவையை மக்களவை போலப் பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி கலைத்து விட முடியாது. அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வொரு இரண்டாவது ஆண்டும் ஓய்வு பெறுகின்றனர். மக்களவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முழு பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால், மாநிலங்களவையில் ஒருவர் எம்.பி பதவி ஏற்றுக் கொண்ட நாளிலிருந்து ஆறு ஆண்டுகள் பதவியில் இருக்க முடியும். இடையில் மக்களவை கலைக்கப்பட்டாலும் மாநிலங்களவை அப்படியே தொடரும். மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக இருப்பவர்களுக்குக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. ஆனால் அவர்கள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம்.

அண்மைச் செய்தி: ‘’வி.பி.துரைசாமிக்கு டெல்லியில் மிகப்பெரிய பொறுப்பு காத்திருக்கிறது’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை’

டெல்லியில் எம்.பி குடியிருப்பு வளாகத்தில் ஒரு குடியிருப்பு, பிராட்பேண்ட் வசதியுடன் கூடிய தொலைப்பேசி இணைப்பு, எரிவாயு இணைப்பு வசதிகள், மாத ஊதியம், அலுவலக படி, உதவியாளர் படி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலத்தில் வந்து போக விமானம் அல்லது ரயிலில் இலவச பயணச் சலுகை போன்றவை கிடைக்கும். பிற எம்.பிக்களுக்கு என்னவெல்லாம் சலுகைகள், ஊதியம், ஓய்வூதியம், எழுது பொருட்கள், அஞ்சலக செலவுகள் அளிக்கப்படுகிறதோ, அதையே நியமன உறுப்பினர்களும் பாரபட்சமின்றி பெறுவார்கள். நியமன உறுப்பினர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுப் பதவியேற்ற நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் ஏதாவது கட்சியில் சேர விரும்பினால் அதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.

ஆனால், இந்த காலகட்டத்துக்குள் அவர்கள் கட்சியில் சேராமல் பின்னாளில் சேர முடிவெடுத்தால் அவர்கள் நியமன உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். முக்கிய மசோதாக்கள் மீதான விவாதம், கவன ஈர்ப்பு நோட்டீஸ் தருவது உட்பட அனைத்து அலுவல் நடைமுறைகளிலும் நியமன உறுப்பினர்கள் பங்கேற்கலாம். ஆனால், அவர்களுக்கான வாய்ப்பு தரப்படும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். நியமன உறுப்பினர்கள், எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் வேலைகளைச் செயல்படுத்த நாட்டின் எந்த மாநிலத்திலிருந்தும் எந்த மாவட்டத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.