கொடநாடு வழக்கு – செந்தில்குமாரிடம் தனிப்படை போலீஸ் விசாரணை!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஓ.ஆறுமுகசாமியின் மகனும், செந்தில் பேப்பர்ஸ் அண்ட் போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான செந்தில்குமாரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2017- ஆம்…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மணல் ஒப்பந்ததாரர் ஓ.ஆறுமுகசாமியின் மகனும், செந்தில் பேப்பர்ஸ் அண்ட் போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான செந்தில்குமாரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017- ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழியான சசிகலாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யபட்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்பட பத்துக்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மறுவிசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

கோவை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் சுதாகர் தலைமையிலான
தனிப்படை போலீஸார் இதுவரை சசிகலா, விவேக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
ஆறுகுட்டி உள்பட 230-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இதனிடையே கோவையைச் சேர்ந்த ஓ.ஆறுமுகசாமி என்பவரது மகனும் செந்தில் பேப்பர்ஸ் அன்ட் போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான செந்தில்குமாரிடம் இன்று தனிப்படை போலீஸார் கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணல் ஒப்பந்ததாரரும், தொழிலதிபருமான ஓ.ஆறுமுகசாமி அதிமுக
தலைமைக்கு மிக நெருக்கமானவர் என்பதோடு, சசிகலா,தினகரனோடு மிக நெருங்கிய நட்பு வைத்திருந்தவர். இந்நிலையில் 2017-ம் ஆண்டு நவம்பவர் மாதம் ஓ.ஆறுமுகசாமிக்கு சொந்தமான அலுவலகங்கள், நிறுவனங்கள், ஹோட்டல், திரையரங்கு உள்ளிட்டவற்றில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக, சென்னை “சிஐடி நகர் ஷைலி நிவாஸ்” அடுக்குமாடி குடியிருப்பில், கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சில
ஆவணங்களை வருமான வரித் துறையினர் கைப்பற்றினர். அதனடிப்படையில் தனிப்படை போலீசார் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செந்தில்குமாரிடம் கொடநாடு எஸ்டேட்டில்ல் கொள்ளையடிக்கபட்ட ஆவணங்கள் எவ்வாறு ஹோட்டல் அறைக்குச் சென்றது?. இதில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.