தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கியது. தவெக அரசின் முதல் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். மேலும், 6-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 7, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்று, 12-ஆம் தேதி அமைச்சர்கள் பதிலுரை அளித்தனர்.
இந்த நிலையில், சுதந்திர தினத்தை ஒட்டி சட்டப்பேரவைக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் சட்டப்பேரவை ஆகஸ்ட் 17-ஆம் தேதி கூடியது. அப்போது முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, சமூக நீதித்துறை உள்ளிட்ட 32 துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன.
அந்தவகையில் இன்று முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும், கைத்தறி , தொழிலாளர் நலன், குறு,சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.




