மேற்குவங்க ரயில் விபத்து: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

மேற்குவங்கம் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ்…

மேற்குவங்கம் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில் நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8 மணி அளவில் விபத்துக்குள்ளானது. இந்த ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வந்ததுதான் இந்த கோர விபத்திற்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தற்போது விபத்தின் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் 2 ரயில்களின் பல பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் சரக்கு ரயிலை ஓட்டிய லோக்கோ பைலட் உள்பட 5 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ரயில் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில், “மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அங்குள்ள அதிகாரிகளிடம் பேசி நிலைமையை கேட்டறிந்தேன். ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்திற்கு செல்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.