பல்கலைக்கழகங்களுக்கு மம்தாவே வேந்தர்: அமைச்சரவை ஒப்புதல்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜியை வேந்தராக நியமிக்க அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ‘பார்வையாளர்’ என்ற பதவியிலிருந்தும் ஆளுநர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக…

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜியை வேந்தராக நியமிக்க அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும், தனியார் பல்கலைக்கழகங்களுக்கு ‘பார்வையாளர்’ என்ற பதவியிலிருந்தும் ஆளுநர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மாநில கல்வித் துறை அமைச்சருக்கு அந்தப் பதவி வழங்கும் முடிவுக்கும் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது என்று அம்மாநில உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “மாநில அரசின் பல்கலைக்கழகங்கள், வேளாண் பல்கலைக்கழக்கள், சுகாதார மற்றும் கால்நடை ஆதார வளர்ச்சி துறைகளின் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கும் முதலமைச்சரே வேந்தராக செயல்படுவார்” என்றார்.

பொதுவாக எல்லா மாநிலங்களிலும் பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்படுவார். பட்டமளிப்பு விழாவும் ஆளுநர் தலைமையில் நடைபெறும். அதேபோல் வேந்தரை நியமிப்பதிலும் ஆளுநர் முக்கிய பங்கு வகிக்கிறார்.

இந்த அமைச்சரவை கூட்டத்துக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமை வகித்தார்.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாகவே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தன்கர் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், மேற்குவங்க பல்கலைக்கழகங்களுக்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜியை வேந்தராக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அடுத்து வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டு அவையின் ஒப்புதலும் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் செயல்பட முடியாதபடி அந்த மாநில பேரவையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநில சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது நினைவுகூரத்தக்கது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.