கர்நாடகா அரசியலில் மடாதிபதிகளின் ஆதிக்கம் அதிகம் என்பது நாம் அறிந்த ஒன்று, அப்படிபட்ட மடங்களில் ஒன்றான லிங்காயத்து மடத்தின் மடாதிபதி ஒருவரை அம்மாநில போலீசார் சிறு குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
கர்நாடகா, சித்ரதுர்கா மாவட்டத்தில் லிங்காயத்து சமூகத்தை சார்ந்த ஜகத்குரு முருகராஜேந்திர வித்யபீட மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருக சரணரு ஆவார். இவர் மடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில் பயின்ற இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த பள்ளியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி இரு சிறுமிகளும் கல்வி கற்று வந்துள்ளனர். இவர்களிடம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாமியார் சிவமூர்த்தி முருக சரணரு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர்களின் பெற்றோரிடம் புகார் கூறினர்.
இதனையடுத்து கர்நாடக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் மடம் என்பதால் அவர்கள் மைசூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றிடம் தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்னர். அதனையடுத்து இந்த விவகாரம் வெளி உலகிற்கு தெரியவந்தது. இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியும் மடாதிபதி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால் மக்களிடையே அரசுக்கு எதிரான உணர்வு அதிகமாகியது. இதனையடுத்து கடந்த வாரம் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடனே சாமியார் சிவமூர்த்தி முருக சரணரு மகாராஷ்டிராவிற்கு தப்பிச் செல்ல முயன்றார். அவரை ஹாவேரி மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்திய போலீசார், அவர் கர்நாடகாவை விட்டு வெளியே செல்லக்கூடாது. மீறிச் சென்றால் கைது செய்வோம் என எச்சரித்தனர். மேலும், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமானநிலையங்களில் லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதனையடுத்து அவர் மீண்டும் மடத்திற்கு திரும்பினார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அம்மாநில ஏடிஜிபி அலோக் குமார் கூறுகையில், கைது செய்யப்பட்ட சாமியாருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுற்றது. அவர் உடல்நிலை சீராக உள்ளது. இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை (இன்று) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது என்றார்.
கர்நாடகாவில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத்து சமூக மக்களின் மடாதிபதி என்பதாலும், அம்மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா மற்றும் தற்போதைய முதலமைச்சர் பொம்மை ஆகியோருக்கு நெருக்கமான மடம் என்பதால், இந்த கைது நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டதாகவும், இவர் மீதான விசாரணை நியாயமாக நடைபெறுமா ? என்பதே சந்தேகம் என மாணவிகளுக்கு ஆதரவாக போராடி வருபவர்கள் கூறி வருகின்றனர்.
இராமானுஜம்.கி









