ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை விரைவில் அழைத்து வர துரித நடவடிக்கை- ஒடிசா செல்லும் முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த…

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்து கொண்டிருந்த கோரமண்டல் ரயில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரம் அருகே பஹனகா என்ற பகுதியில் சரக்கு ரயிலுடன் மோதிய விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டன. அதே நேரத்தில் மற்றோரு தடத்தில் வந்த யஷ்வந்தபூர் – ஹவுரா ரயில், தடம்புரண்டு விழுந்த பெட்டிகள் மீது மோதியது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமுற்ற 900-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில், கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வர தமிழ்நாட்டை சேர்ந்த 101 பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், 17 பேர் பயணம் மேற்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மீட்பு பணிகளில் உடனிருந்து தமிழ் நாட்டினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திட விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த், ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் கொண்ட குழு ஓடிசா சென்றுள்ளது.

இந்நிலையில் ஒடிசா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட உள்ளோம். விபத்தில் காயம் அடைந்த தமிழர்களை மீட்டு இங்கு கூட்டி வருவதற்கான முயற்சிகளை எடுக்க உள்ளோம். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. அவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இங்கு இருக்கின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஒடிசா முதலமைச்சரோடு தொடர்ச்சியாக பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.