திமுக முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு தொடர்புள்ள இடங்களில் மத்திய குற்ரப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு, மு.க.ஸ்டாலின், கே.என்.நேரு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சோதனை நிறைவடைந்த பிறகு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “8 மணி நேரமாக என் வீட்டில் நடைபெற்ற மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் சோதனை நிறைவுபெற்றது. அனைத்து அறைகளையும் சோதனையிட அனுமதி அளித்தேன். எனக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.
ஹிட்லர், கோயபல்ஸ் என்று முதல்வரையும் அமைச்சர்களையும் விமர்சித்ததற்கு என் வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. கஜானா காலி என்று சொல்லிவிட்டு ரூ.1,200 கோடிக்கு புதிய தலைமை செயலகம் ஏன் என்று கேட்டேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, நாங்கள் கேட்கும் கேள்வியை மடைமாற்றும் செயலில் தவெக ஈடுபடுகிறது.
செப்.18-ம் தேதி என்னை ஆஜராக சொல்லியிருக்கிறார்கள், ஆஜராகி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, நேராக தாராபுரம் தொகுதியில் பிரச்சாரத்திற்கு செல்வேன். வரும் இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றியை நிலைநாட்டுவோம். இதற்கு பின்பு யார் யார் இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். இந்த மாதிரி சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம்” என்றார்.




