“கடன் வாங்கி வட்டிக் கட்டிகொண்டிருக்கும் நிலையில் புதிய தலைமைச் செயலகம் தேவையா?” – சீமான்

தற்போதைய தலைமை செயலகத்தில் என்ன பிரச்சினை உள்ளது? என்று சீமான கேள்வி எழுப்பியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தனியார் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சொன்னது பொதுக்கருத்து, அந்தக் கருத்து கடந்த ஆட்சியாளர்களுக்கும், அதற்கு முன் ஆட்சி செய்தவர்களுக்கும் பொருந்தும். இதே கருத்தை வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் ‘வையத் தலைமை கொள்’ என்ற புத்தகத்திலும் எழுதியுள்ளார். இந்தக் கருத்தை உங்களோடு பொருத்திக்கொள்வது அவசியமற்றது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் செயலுக்கு நான் நேர் எதிரானவன், எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எத்தனை காலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பீர்கள், இந்த நிலத்தில் உள்ள தேசிய இன முதலாளிகளிடம் இந்த முதலீட்டை ஈர்க்கலாம்” என்றார்.

இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, “இடதுசாரி கட்சிகள் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதை நான் வரவேற்கிறேன்; இந்த முடிவை அவர்கள் காலம் தாழ்த்தி எடுத்துள்ளார்கள். இந்த நாட்டில் இருந்த தீய அரசியல் ஆட்சிமுறைக்கு நெடுங்காலம் துணை நின்றிருந்தார்கள். இப்போதாவது அந்த முடிவை எடுத்துள்ளார்கள், அதை பாராட்டுகிறேன்.

அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள், பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் சேர்ந்து அதே பதவிக்கு இப்போது போட்டியிடுவதற்கு காரணம் என்ன?. மக்கள் காசை துளியும் வீணடிக்க மாட்டேன் என்று சொல்லும் முதல்வரிடம் நான் ஒன்று கேட்கிறேன், ‘இது மக்கள் காசை வீணடிப்பதாக இல்லையா?’. ஆளுங்கட்சியுடன் இருந்தால் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று நினைக்கும் கருத்து ஆபத்தானது” என்றார்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது குறித்த கேள்விக்கு, “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் என்பது அறிவிப்பு தான், நடக்கப்போவதில்லை, கட்டவிடப்போவதில்லை. புதிய தலைமை செயலகம் வேண்டும் என சிலர் அறிக்கை விடுகிறார்கள், தற்போதைய தலைமை செயலகத்தில் என்ன பிரச்சினை உள்ளது?. உங்களுக்கு புதிய தலைமைச் செயலகம் வேண்டும் என்றால், ஓமந்தூரார் மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தில் தலைமைச் செயலகத்தை அமைத்துக்கொள்ளுங்கள். கடன் வாங்கி, கடன் வாங்கி அதற்கு வட்டி கட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற செலவு தேவையா?. சென்னையில் எங்கு தலைமைச் செயலகம் கட்டினாலும் நெருக்கடி ஏற்படும். சொந்த ஊரில் அகதியாக இருக்க முடியாது’ என்றும் சீமான் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.