தேவை ஏற்பட்டால் இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் நடத்துவோம் என பாகிஸ்தான் அமைச்சரும், ஆளுங்கட்சியின் மூத்த தலைவருமான ஷாஜியா மாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
அண்மையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, ”ஒசாமா பின்லேடன் இறந்துவிட்டார். ஆனால் குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் வாழ்கிறார். அவர் இந்தியாவின் பிரதமர்” என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானை பயங்கரவாதத்தின் மையமாக உலக நாடுகள் பார்க்கின்றன என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதற்கு பதிலடி தரும் வகையில் பிலாவல் பூட்டோ இவ்வாறு தெரிவித்திருந்தார். இதையடுத்து பூட்டோவின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழத் தொடங்கியது.
பிலாவல் பூட்டோவின் கருத்துக்கு பதிலளித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “பிலாவல் பூட்டோவின் கருத்துக்கள் பாகிஸ்தானை மேலும் தாழ்வடையச் செய்துள்ளது. 1971ஆம் ஆண்டு நடைபெற்றதை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மறந்துவிட்டார். இது வங்காள இனத்தவர்கள் மற்றும் இந்துக்களுக்கு எதிராக, பாகிஸ்தான் ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலையின் நேரடி விளைவாகும்.
இந்தியா மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் தகுதி நிச்சயமாக பாகிஸ்தானுக்கு இல்லை. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் ’நாகரீகமற்ற சீற்றம்’, பயங்கரவாதிகளையும் அவர்களின் பினாமிகளையும் பயன்படுத்துவதில், பாகிஸ்தானின் இயலாமை அதிகரித்து வருவதை வெளிக்காட்டுவதாக தெரிகிறது.
நியூயார்க், மும்பை, புல்வாமா, பதான்கோட் மற்றும் லண்டன் போன்ற நகரங்கள் பாகிஸ்தானால் தூண்டப்பட்ட பயங்கரவாதத்தின் வடுக்களை தாங்கி நிற்கின்றன. இந்த வன்முறைச் சம்பவங்கள், அவர்களின் சிறப்பு பயங்கரவாத மண்டலங்களில் இருந்து வெளிப்பட்டு, உலகின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேக் இன் பாகிஸ்தான் பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பிலாவல் பூட்டோவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷாஜியா மாரி, இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் நடத்துவோம் என அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது. அணுசக்தி வைத்திருக்கும் நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. தேவை ஏற்பட்டால், முன்னோக்கி நகர்வோமே தவிர, நாங்கள் பின்வாங்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.







