கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில், மூன்றாவது இடத்திற்கான போட்டியில் மொராக்கோ அணியை வீழ்த்தி குரோஷியா அணி அபார வெற்றி பெற்றது.
கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், மூன்றாவது இடத்தை பிடிப்பதற்கான போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில், அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த குரோஷியா அணியும் மொராக்கோ அணியும் மோதின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மிகவும் பரபரப்புடன் தொடங்கிய இந்த ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் குரோஷிய அணியின் ஜோஸ்கோ வார்டியோல் கோல் அடித்து மொராக்கோ அணியை கலங்கடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 9வது நிமிடத்தில் மொராக்கோ அணியின் அஷ்ரப் டேரி கோல் அடித்தார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விறுவிறுப்பைக் கூட்டிய இந்த போட்டியின் 42வது நிமிடத்தில் குரோஷிய அணியின் மிஸ்லாவ் ஓர்சிக் கோல் அடிக்க, குரோஷிய அணி முன்னிலை பெற்றது.
இறுதி வரை போராடிய மொராக்கோ அணியால் கோல் அடிக்க முடியாமல் போக, 2-1 என்ற கோல் கணக்கில் லூக்கா மோட்ரிச் தலைமையிலான குரோஷிய அணி அபார வெற்றி பெற்று, நடப்பு தொடரில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 24 ஆண்டுகளுக்கு பிறகு 3வது இடம் பிடித்த குரேஷிய அணிக்கு ரூ.225 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. கடந்த 2018 உலகக்கோப்பையில் குரேஷியா இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 4வது இடம் பிடித்த மொராக்கோ அணிக்கு 204 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. உலகக்கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிய முதல் ஆப்ரிக்க அணி என்ற வரலாற்றை படைத்துள்ளது மொராக்கோ.