தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்களை அவர்களின் வீட்டிற்கு சென்று சந்திக்க உள்ளேன். காங்கிரஸ் அமைச்சர்களையும் தவெக அமைச்சர்களையும் இன்று சந்திக்க உள்ளேன்.
நாளை மறுநாள் கட்சியின் மாவட்ட தலைவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். அமைப்பு ரீதியான நடவடிக்கைகள் எடுக்க ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்.
எங்கள் கட்சியின் இரு கண்களாக இரு அமைச்சர்கள் உள்ளனர். இரு அமைச்சர்களும் காங்கிரஸ் கட்சியின் மரியாதையை காப்பாற்றுவார்கள். காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பிரச்சனை கிடையாது. ராகுல் காந்தி என்ற ஒரு அணி மட்டுமே உள்ளது.
நாங்கள் எல்லோரும் விளையாட்டு வீரர்கள் தான். எங்களுடைய கருத்துக்களை நாங்கள் மென்மையாக சொல்வோம். எங்களை சீண்டுபவர்களை அதே வேகத்தில் எதிர்ப்போம். அமைச்சரவையில் இருக்கும் போது எந்த அளவுக்கு பொறுமையாக இருக்க வேண்டுமோ அந்த அளவுக்கு பொறுமையாக இருப்போம்.
மூன்று மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலும் வர உள்ளது. அதில் வெற்றி பெறுவது யார்…? நாங்கள் தான். இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்த பிறகு எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் தெரிவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.




