பிரதமரை சந்தித்து நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை, காவிரி பிரச்சனை, மேகதாது அணை பிரச்னை உள்ளிட்டவை குறித்து கோரிக்கை உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் இரவு தங்கினார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். புதிய துணை குடியரசு தலைவராக பெறுப்பேற்றுள்ளதற்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பு டெல்லியில் உள்ள துணை குடியரசு தலைவர் இல்லத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 11.30 மணிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் டெல்லியிலுள்ள அமைந்துள்ள பொதிகை தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரையும் இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இருவரும் தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பேசினோம். இந்த சந்திப்பு மனநிறைவாக இருந்தது.
இதனை தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமரை சந்திக்கவுள்ளேன். செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்ததற்கு நன்றி தெரிவிக்க உள்ளேன். மேலும் பிரதமரை சந்திக்கும் போது நீட் தேர்வு , புதிய கல்வி கொள்கை, காவிரி பிரச்சனை, மேகதாது உள்ளிட்டவை குறித்து கோரிக்கை உள்ளேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு இரவு 10.40 மணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







