இலவசங்கள் எது என்பதற்கு வரையறை உண்டா? – வழக்கை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

இலவசங்களை தடை செய்வது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.   இலவச வாக்குறுதிகளை தடை செய்ய வேண்டும். தேர்தல்…

இலவசங்களை தடை செய்வது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

 

இலவச வாக்குறுதிகளை தடை செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிப்பு குறித்து கண்காணிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபத்யாய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. திமுக சார்பில் ஆஜரான வில்சன், கண்காணிப்பு குழு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இடையீட்டு மனு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

 

இந்தியா சோசலிச நாடு என்றும் இதனை மத்திய அரசு முதலாளித்துவ நாடாக மாற்ற முயற்சிப்பதாகவும், குற்றம் சாட்டினார். மேலும் ரிட் மனுவின் நோக்கமானது மாநிலக்கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகளை தடுப்பதாக உள்ளதாகவும் வாதிட்டார்.

 

பின்னர் மத்திய அரசு சார்பில் நாங்கள் அத்தனை சமூக நல திட்டத்தையும் எதிர்க்கவில்லை என்றும் மாறாக சமூகநல திட்டங்கள் என்ற பெயரில் அனைத்தையும் இலவசம் என்று வழங்குவது ஏற்கதக்கதல்ல, அது சமூக நலத்துக்கான திட்டம் அல்ல என்றும் வாதிடப்பட்டது.

 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாநில அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளிப்பதை தடுக்க முடியாது என்ற பரிந்துரை தான் அதிகமாக கிடைத்துள்ளது என்றார். அதேவேளையில் இலவசங்கள் எது என்பது தொடர்பாக வரையறுக்க வேண்டும்? மருத்துவ காப்பீடு, குடிநீர் இணைப்பு, நுகர்வோர் மின்னணு பொருட்கள் வழங்குவது ஆகியவற்றை இலவசம் என வகைப்படுத்த முடியுமா ? என கேள்வி எழுப்பினார்.

அதேவேளையில் MNREGA திட்டம் மக்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டம், கண்ணியமாக வாழ வழி வகுத்துள்ள திட்டம் ஆகும். மேலும் ஆட்சியில் இல்லாத அரசியல் கட்சிகள் கூட தேர்தல் இலவசங்களை அறிவிக்கின்றனர். எனவே இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் கருத்தை அறிந்து, விவாதித்த பின்னரே முடிவெடுக்க முடியும் என்றார். இந்த வழக்கின் மனுவை அரசியல் கட்சிகளுக்கு வழங்கவேண்டும்.

 

அதனைதொடர்ந்து அனைத்து தரப்பினரும் தங்கள் பரிந்துரைகளை வரும் சனிக்கிழமைக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடமும் ஒரு நகலை வழங்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (22-ம் தேதி) ஒத்தி வைத்தது.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.