“தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்” – செல்லப்பிராணிக்காக கண்கலங்கிய தலைமை நீதிபதி

“தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்” என செல்லப்பிராணிக்காக தலைமை நீதிபதி கண்கலங்கிய சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக ரேபிஸ் தினத்தையொட்டி சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம்…

“தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்” என செல்லப்பிராணிக்காக தலைமை நீதிபதி கண்கலங்கிய சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக ரேபிஸ் தினத்தையொட்டி சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரேபிஸ் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மருத்துவர் ராணி கவுர் பானர்ஜி, பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை ராணி கவுர் பானர்ஜி தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து பேசிய நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, “படித்தவர்கள் தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “சீட்டுக்கட்டில் ஜோக்கர் இருப்பது சிறந்தது. அந்த சீட்டுக்கட்டுகளில் நாம்தான் ஜோக்கர்கள். கடந்த 16-18 மாதங்களாக விலங்கு போன்ற வாழ்வை வாழ்ந்து வருகிறோம். விலங்குகளுக்கும், மரங்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டும்.

நானும் எனது மனைவியும் கல்கத்தா – சென்னைக்கு ஜனவரியில் சாலை வழியாகவே வந்தோம். செல்லப்பிராணியும் எங்களுடன் வந்தது. குழந்தை போன்று நாங்கள் வளர்த்த செல்லப்பிராணியான நாய் 13.5 வயதில், மனிதனோடு ஒப்பிட்டால் 92 வயதுக்கு சமம் அது சென்னை வந்தவுடன் இறந்தது. (கண் கலங்கினார் சஞ்சீப் பானர்ஜி)

செல்லப்பிராணி இறந்த பிறகு வளர்ப்பதற்கு நாய்களை பலர் கொடுத்தார்கள், வளர்க்கவில்லை. தெருவோர நாய்களை பராமரிக்கிறோம். படித்தவர்கள் தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும். விலங்குகள் நம்மிடம் அன்பை எதிர்பார்க்கின்றது, ஆனால் அதை நாம் புரிந்துகொள்வதில்லை.

ரேபிஸ் நோய் குறித்து ஒருசிலருக்கு அச்சம் உள்ளது. அதுதொடர்பான புரளிகளை புறக்கணித்துவிட்டு, அதன் உண்மைகளை மக்கள் உணர வேண்டும்.” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.