சட்டப்பேரவை தலைவர் மாண்போடு நடந்து கொள்வார் என நம்புகிறோம்: ஜெயக்குமார்

சட்டப்பேரவைத் தலைவர் மாண்போடு நடந்து கொள்வார் என நம்புகிறோம் என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்…

சட்டப்பேரவைத் தலைவர் மாண்போடு நடந்து கொள்வார் என நம்புகிறோம் என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாளை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ள நிலையில், அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மூன்று முறை கடிதம் அனுப்பியும் இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்காத நிலையில், அது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, பொன்னையன்,  கே.பி.முனுசாமி , பெஞ்சமின், தனபால், நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம் , செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் , கே.பி.அன்பழகன், சி.விஜயாபாகர், எஸ்.பி.வேலுமணி, காமராஜ் ,ஒ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், திமுக கட்சி தற்போது கருணாநிதி குடும்பமாகவே மாற்றி விட்டனர். நாளை அதிமுக 51ம் ஆண்டு துவக்க விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.

மத்திய அமைச்சர்கள் மாநில அரசின் திட்டங்களை ஆய்வு செய்வது, மாநில அரசின் உரிமைகளை பறிக்காத வகையில் அமைய வேண்டும். மேலும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மத்திய அமைச்சர்கள் ஆய்வு செய்வது விமர்சிக்கப்பட வேண்டியதில்லை என்று கூறினார்.

நாளை நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்பது பற்றி இன்று இங்கு பேசவில்லை. சட்டப்பேரவைத் தலைவர் மாண்போடு நடந்து கொள்வார் என நம்புகிறோம் என கூறினார்.

டி.டி.வி. தினகரன் பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் என்று தெரிவித்துள்ள நிலையில் அதிமுக இதனை ஏற்று பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்கிற கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் அதுகுறித்து முடிவெடுப்போம் என தெரிவித்தார்.

ஓ பன்னீர்செல்வத்துடன் சமாதானமாக போவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்கிற கேள்விக்கு, ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டதால், அது பற்றி விவாதிக்கவில்லை என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.