நம்ம நிதி, நம்ம பொறுப்பு என்ற முறையில், ஆளுநர் மாளிகைக்கு ரூ5 கோடியை ரூ3 கோடியாக குறைத்துள்ளதாகவும், அதே நேரம் ஆளுநர் குறைசொல்லுமளவிற்கு நாங்கள் நடக்கவில்லை என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்
ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து விளக்கமளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘சில அசாதாரண நிகழ்வாக அன்றைக்கு இருந்த ஆளுநரின் செயலர், நிதி செயலருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர்களின் செயல்பாடுகளைச் சிறப்பிப்பதற்கு உள்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ளனர். அதில், உடனடியாக செயல்படுத்திவிட்டீர்கள் என ஆதாரத்தை நீங்கள் கொடுத்தால் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார். அதனை முறையில்லா மிரட்டும் கடிதமாகவே கருதுகிறேன். ஜனநாயக நாட்டில் இதுவெல்லாம் எப்படி செல்லும்? என தெரியவில்லை என கூறினார்.
மேலும், ரூ 5 கோடிக்கு எந்த காரணமும் சொல்லத் தேவையில்லை என்பது ஜனநாயகத்திற்குப்பட்டது அல்ல. நிலுவையிலிருந்த ரூ 1,56,000 இந்த ஜனவரி மாதம் ரூ1 கோடியாக உயர்த்த வேண்டும் எனவும் நிதித்துறைச்செயலருக்குக் கடிதம் அப்போது எழுதியுள்ளார். கோப்பு உருவாக்காமல், நிதியமைச்சரிடம் கூறாமல், கொள்கை முடிவெடுக்காமல் நிதிச்செயலரே ரூ 50,00,000 அதிகரித்து ஒரே கோப்பில் அன்று முடிவெடுக்கிறார். மார்ச் மாதத்திற்குள்ளாக அந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்த முடியவில்லை. மீதமுள்ள பணத்தை மாளிகை கணக்கில் சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுத்துறையின் கோப்புகளை எடுத்துப் பார்த்தால் கையெழுத்து, சீல் இல்லாமல் கடிதம் கொடுத்துள்ளார் அன்றைய ஆளுநரின் செயலாளர். அட்சயப்பாத்திராவுக்காக கட்டிடத்தைக் கட்டி ஒரு நாள் கூட உணவு தயாரிக்கவில்லை. 2021இல் புது ஆளுநர் வந்த பிறகு 17 கோப்புகள் கூடுதல் செலவுக்கோ, நிதிக்கோ கோப்புகள் உருவாக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
கார்கள் வாங்குவதற்கு ரூ.2.10 கோடி, சுதந்திர தின விழா ரூ 25 இலட்சம், சுற்றுப்பயணம் ரூ 15 இலட்சம், அமைச்சரவை பதவியேற்பு ரூ 10 இலட்சம், கிறிஸ்துமஸ் செலவிற்கு ரூ 25 இலட்சம், குடியரசு விழாவிற்கு ரூ.20 இலட்சம், புது பர்னிச்சர் என கொடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் குறைசொல்லுமளவிற்கு நாங்கள் நடக்கவில்லை. வேறு எந்த மாநிலமும் தமிழ்நாடு போன்று ஆளுநருக்கான நிதியை உயர்த்தவில்லை எனவும் அவர் கூறினார்.
தணிக்கையில் குறை சொல்லாத அளவிற்கு நாம் செயல்படவேண்டும். அளித்த செலவு பண்ணாத பணத்தை அடுத்த ஆண்டு கேட்கக்கூடாது. அதனால் ரூ 5 கோடியை ரூ3 கோடியாகக் குறைத்துள்ளோம். நம்ம நிதி, நம்ம பொறுப்பு என்பதால் சிஏஜி தணிக்கை கோரியிருக்கிறோம். முதலமைச்சரின் கையெழுத்தைப் பெற்று நிதியை எப்படி செயல்படுத்த வேண்டும்? என அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுக்கவுள்ளோம். ஜனநாயக நாட்டில் மன்னர் இல்லை. எந்த விதிமுறையில் நிதி ஒதுக்கப்படுகிறதோ, அப்படி செலவிட வேண்டும் என்றார்.







