கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் விரும்பிய நிலையில், யாருக்கும் பதில் சொல்லாமல் வேட்பாளர்களை அறிவித்த, பாஜக. பாஜக போட்டியிடும் தொகுதியில் வேட்பாளரை அறிவித்துள்ள அதிமுக. இது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துமா? பார்க்கலாம்…
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் மே 10ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. அங்கு கோலார் தங்கவயல், காந்தி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் எம்.ஜி.ஆரும் ஒரு தேர்தலில் பிரச்சாரம் செய்துள்ளார். அதிமுக வேட்பாளர் 4 முறை வெற்றியும் பெற்றுள்ளனர் என்கிறார்கள்.
இதையடுத்து, இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியில் 3 முதல் 5 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விரும்பியது. இதற்காக அதிமுக மாநிலச் செயலாளர் குமார், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆகியோர் தனித்தனியாகச் சென்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவைச் சந்தித்தனர். கூட்டணியில் போட்டியிடுவது குறித்தும் வலியுறுத்தியதாகவும் சொல்லப்பட்டது. இருதரப்பும் போட்டியிடுவோம் என்று தனித்தனியாகவும் தெரிவித்தனர்.
ஆனால், இருதரப்புக்கும் இசைவு கொடுக்காத பாஜக, மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அதிமுகவிற்கும் தொகுதி ஒதுக்கவில்லை. அக்கட்சியின் ஆதரவை மட்டும் கேட்டதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக கர்நாடகா மாநில அவைத் தலைவர் டி.அன்பரசனை களமிறக்கியுள்ளது. கடந்த தேர்தலில் 7 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்ட நிலையில், தற்போது ஒரே ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் பாஜக வேட்பாளராக முரளி என்பவர் போட்டியிடுகிறார். ஆக பாஜக வேட்பாளரை எதிர்த்து, அதிமுக களமிறங்கியுள்ளது. இதுதான் கவனம் பெறுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைப் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று அதிமுக தலைவர்கள் சிலர் சொல்லி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ‘தேசிய அளவில் பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தினார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘ஆமா நாங்களும் இதைத் தான சொல்றோம்’ என்றார் எடப்பாடி பழனிச்சாமிய. ஆனால், தற்போது அதிமுக தனித்து போட்டியிடுவது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
அண்ணாமலை மீதான கோபம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீதான அதிமுக தலைவர்களின் விமர்சனம் குறைந்த நிலையில், ’அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்’ என்று அண்ணாமலை அண்மையில் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் அதிமுகவினர் மீண்டும் அண்ணாமலையை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இதற்கு, பாஜக-வினர் பதிலுக்கு விமர்சித்து வருகின்றனர்.
மேலும், கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றிய தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராகவும் உள்ளார். அங்கு, அதிமுக தனித்து போட்டி என ஒரு வேட்பாளரை அறிவித்த, ஒரு மணி நேரத்தில், பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய பொருளாதாரப்பிரிவு முன்னாள் மாநிலச் செயலாளர் கிருஷ்ணப்பிரபு அதிமுகவில் இணைந்துள்ளார்.
இவையெல்லாம், அண்ணாமலை மீதான அதிமுகவின் எதிர்ப்பு நிலைப்பாடு, நெருக்கடியாகவும் பார்க்கப்படுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதனால், கூட்டணி குறித்து இரு கட்சிகளும் மீண்டும் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம். பாஜகவின் நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு முதலில் தேர்தல் பணிக்குழுவை அறிவித்தாலும் அதிமுக வேட்பாளரை ஆதரித்தது பாஜக. ஆனால், கர்நாடகாவில் பாஜக வேட்பாளர் ஏற்கனவே களத்தில் இருந்தும் வேட்பாளரை அறிவித்துள்ளது அதிமுக. பாஜக வேண்டாம் என்கிற அக்கட்சி தலைவர்கள் சிலரின் முடிவாகவும் இதனை பார்க்கலாம் என்கிறார்கள்.
மேலும், அதிமுக வேட்பாளரை இபிஎஸ் அறிவித்துள்ள நிலையில், ஓபிஎஸ் நிலைப்பாடு என்னவாக இருக்கும். வேட்பாளரை அறிவிப்பாரா? பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பாரா? இல்லை மவுனமா கடந்து விடுவாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
கர்நாடாகா தேர்தலில் பாஜகவில் தொடங்கிய அதிருப்தி, எதிர்ப்பு, கூட்டணிக்குள்ளும் ஏற்படுமா..? ஓரிரு நாட்களில் பரபரப்புகள் அடங்குமா..? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமா…? பார்க்கலாம்.








