“பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய மத்திய அரசுடன் பேசி வருகிறோம்” – எடப்பாடி பழனிசாமி!

பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய மத்திய அரசுடன் பேசி வருகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் பூவநாத சுவாமி திருக்கோவிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். பின்னர் தனியார் திருமண மஹாலில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர் சங்கம் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது அதிமுக ஆட்சி அமைந்த உடன் கோவில்பட்டி கடலைமிட்டாயை சத்துணவில் இடம் பெற செய்ய வேண்டும், அது தங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டும் என கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

“சிறு குறு தொழில் அதிகமாக செயல்பட வேண்டும், அவ்வாறு செயல்பட்டால் தான் வேலை வாய்ப்பை உருவாக்கி தர முடியம், தீப்பெட்டிக்கு 18 சதவீத வரி மத்திய அரசிடம் பேசி 12 சதவீதமாக குறைத்தோம். தீப்பெட்டிக்கு நெருக்கடியான சூழ்நிலை, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றால் லைட்டரை தடை செய்ய வேண்டும்.

இது தொடர்பாக சட்டமன்றத்தில் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. பிளாஸ்டிக் லைட்டரை தடை செய்ய மத்திய அரசுடன் பேசி வருகிறோம். கோவில்பட்டி என்று சொன்னாலே கடலை மிட்டாய் என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெயர் போன ஊர்.

கோவில்பட்டியில் தயாரிக்கபடும் கடலை மிட்டாய் பெயரை மற்ற இடங்களில் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் தரம் குறைந்து காணப்படுவதாக உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்தனர். இங்குள்ள உற்பத்தியாளர்கள் தங்களுக்கான ஒரு லேபிளை தயார் செய்து வெளியே விற்பனை செய்ய முயற்சிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.