நடிகர் விஜய் காங்கிரஸுக்கு வந்தால் இணைக்க தயார் – விஜய் வசந்த் எம்பி பிரத்யேக பேட்டி!

நடிகர் விஜய் காங்கிரஸில் இணைய விரும்பினால் சேர்க்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53 வந்து பிறந்தநாள் விழாவை தமிழக காங்கிரசார் வெகு…

நடிகர் விஜய் காங்கிரஸில் இணைய விரும்பினால் சேர்க்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 53 வந்து பிறந்தநாள் விழாவை தமிழக காங்கிரசார் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி ராகுல் காந்தியின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகரும், எம்.பியுமான விஜய்வசந்த் கலந்து கொண்டு கேக் வெட்டி, ஏழை – எளிய மக்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனையடுத்து நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறியதாவது:

நடிகர் விஜய் அரசியலில் வர வேண்டும் என்ற ஆசை, அவருக்கு முன்னதாகவே இருந்து வந்தது. தற்போது மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதன் மூலம் அதனை வெளிப்படுத்தி முதல் படியை எடுத்து வைத்துள்ளார். அரசியலுக்கு முன்னதாகவே வந்துவிட்டார் என்று எண்ணத் தோன்றுகிறது. காலம் தான் பதில் சொல்லும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் எங்கள் கூட்டணியில் இணைவரா என்பதுபற்றி தெரியாது. அப்படி முடிவு விஜய்க்கு இருந்தால் அதுகுறித்து கட்சி மேலிடம் தான் முடிவெடுக்குக்கும். எங்கள் கட்சியில் இணைய விரும்பினால் இணைக்க தயாராக உள்ளோம். ஏற்கனவே கலைத்துறையில் இருந்து ஏராளமானவர்கள் வந்துள்ளனர். அவர்களில் பலர் சாதித்தும் உள்ளனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில்பாலாஜி விசயத்தில் அரசியல் நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர். சுமார் 13 மணி நேரம் அவரை சித்திரவதை செய்து இரவு நேரத்தில் கைது செய்ய முயன்றதை நாங்கள் கண்டிக்கிறோம். பாஜக ஆளாத மாநிலங்களில் முக்கிய பிரமுகர்களுக்கு இது போன்ற நெருக்கடி கொடுப்பது என்பது புதிதல்ல. அதுபோன்று தான் செந்தில்பாலாஜி விஷயத்திலும் அமலாக்கத்துறையினர் செயல்பட்டு உள்ளனர்.

இவ்வாறு விஜய் வசந்த் எம்.பி தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.