மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு விவகாரம் : நியூஸ் 7 தமிழுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு விவகாரத்தில் நியூஸ் 7 தமிழ் நடத்திய அறச்சீற்றம் நிகழ்ச்சியின் எதிரொலியாக நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 118…

மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு விவகாரத்தில் நியூஸ் 7 தமிழ் நடத்திய அறச்சீற்றம் நிகழ்ச்சியின் எதிரொலியாக நடவடிக்கை எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை அமைந்துள்ளது. அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து பெருங்கால் மதகு பாசனம், 40 அடி கால்வாய் பாசனம், 80 அடி கால்வாய் பாசனம் என மூன்று பிரிவுகளாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அணையில் 40 அடி நீர் இருந்தாலே பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அணையில் அருகில் உள்ள பெருங்கால் பாசன பகுதிகளான மணிமுத்தாறு, சிங்கம்பட்டி அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், தெற்கு பாப்பாங்குளம் உள்ளிட்ட 7 கிராமங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்தாண்டு பருவமழை பொய்த்து போனது மற்றும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்துபோனதால், ஜூன் 1-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதுகுறித்து நியூஸ் 7 தமிழின் அறசீற்றம் பகுதியில் விரிவாக பேசப்பட்டது. அப்போது, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 58 அடியாக இருப்பதால், கார் பருவ சாகுபடிக்காக 40 அடி கால்வாய் மூலம் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஓரிரு நாட்களுக்குள் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடாவிட்டால் 7 கிராம விவசாயிகளை ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபடப்போவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவிடம் கேட்டபோது, ஜூன் 1-ந் தேதி திறக்கப்பட வேண்டிய தண்ணீர் இதுவரை திறக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். இதுகுறித்து பலமுறை அரசுக்கு கேள்வி எழுப்பியதாகவும் கூறினார். அரசு, தண்ணீர் திறக்கவில்லை என்றால் போராட்டமாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் கோரிக்கை குறித்து அறச்சீற்றம் பகுதியில் நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்ட நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ” மணிமுத்தாறு அணையில் குடிநீருக்கு மட்டுமே நீர் உள்ளதால், கார் பருவ சாகுபடிக்கு நீர் திறக்க முடியவில்லை 60 அடிக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தால் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.