வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியது.கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மொத்தம் 71 அடி உயரம்
கொண்டது.வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயரும் போது அணை முழு கொள்ளளவை எட்டியதாக கணக்கிடப்படுகிறது. இன்று காலை வைகை அணையின் நீர்மட்டம் 65.19 அடியாகவும்,நீர் வரத்து வினாடிக்கு 942 கன அடியாகவும் இருந்த நிலையில், இன்று அதிகாலை முதல் வருசநாடு, மேகமலை, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு பல மடங்கு அதிகரித்தது. இன்று காலை 10 மணி அளவில் வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3800 கன
அடி வரை அதிகரித்தது.தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன
அடிக்கும் அதிகமாகவே இருந்ததால் அணையின் நீர்மட்டம் இன்று இரவு 9:30 மணி
அளவில் 66 அடியை எட்டியது.
இதனைத் தொடர்ந்து வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் தேனி,மதுரை,
திண்டுக்கல்,சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு முதல்
கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியாகவும், நீர் இருப்பு
4860 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3400 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில்,அணையில் இருந்து வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 68.5 அடியை எட்டும்போது இரண்டாவது கட்ட வெள்ள அபாய
எச்சரிக்கையும், 69 அடியை எட்டும் போது மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட வெள்ள
அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும் என்பது
குறிப்பிடத்தக்கது.