அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் பஞ்சம் – நீதிமன்றம் வேதனை

அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழ்நாட்டில் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.   திருவள்ளூர் மாவட்டம், வட பெருமாக்கம் பகுதியில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட…

அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழ்நாட்டில் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம், வட பெருமாக்கம் பகுதியில் நீர் நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடத்திற்கு மின் இணைப்பை துண்டித்தது தொடர்பாக வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு திரும்ப பெறப்பட்டதையடுத்து, இதனை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

 

முன்னதாக இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

 

வேலூரில் ஒரு கிராமத்தில் ஆறு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என கூறிய நீதிபதிகள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசு அதிகாரிகள் எதற்காக ஊதியம் பெறுகின்றனர்? என்று கேள்வி எழுப்பினர்.

 

அதிகாரிகள் முறையாக பணியாற்றாததற்கு அரசு தான் காரணம் எனவும் தெரிவித்தனர். பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் எந்த பணியும் செய்வதில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இதே நிலை தான் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.