ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளையும் கவனியுங்கள், இதயத்திற்கு இதமாக இருக்கும் என பிரதமருக்கு சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் 10 லட்சம் வேலை தொடர்பான அறிவிப்பு குறித்து எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தந்த துறை / நிறுவனங்கள் எப்போதோ அறிவித்து நிரப்பி இருக்க வேண்டியதை இப்போது அறிவித்துள்ளீர்கள். 2014-இல் சொன்ன 2 கோடி வேலை வாய்ப்பு வாக்குறுதியை நாங்கள் சொல்லவே இல்லை என்று உங்கள் பிரச்சாரகர்கள் மறுத்து விட்டனர் எனத் தெரிவித்துள்ள அவர்,
உங்கள் உள்துறை அமைச்சர் தேர்தல் வாக்குறுதிக்கு “ஜும்லா” என்று புதிய பொருளை அகராதியில் சேர்த்து விட்டார். இப்போது மீண்டும் ஒரு அறிவிப்பு. இலகிடப்பட்ட இந்த பணி நியமனங்கள் (Mission Mode Recruitment) உரியக் கால இடைவெளிக்குள் நடந்து முடியட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2014-ஐ நினைவூட்டினால் உங்கள் பிரச்சாரகர்கள் மறுப்பது போல 2021-இல் நீங்கள் அறிவித்ததை மறுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன் எனவும், மத்திய கல்வி நிறுவனங்களுக்கான “இலகிடப்பட்ட பணி நியமனங்களுக்கான” ஓராண்டுக் காலக் கெடு செப்டம்பர் 2022-இல் முடிவடைகிறது. ஆனால், அது குறித்து நான் தொடர்ந்து எழுதும் கடிதங்கள் மீது உரிய நடவடிக்கைகள் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர்,மத்திய கல்வி நிறுவனங்களிடம் வெளிப்படைத் தன்மை இல்லை. ரோஸ்டர்களை வெளியிடுவதில்லை எனக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
அண்மைச் செய்தி: ‘ஒற்றைத்தலைமை விவகாரம்; ஓபிஎஸ்க்கு ஆதரவாக போஸ்டர்’
புதிய வாக்குறுதியை தற்போது தந்துள்ளீர்கள். செவிகளுக்கு இனிமையாக உள்ளது. ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளையும் கவனியுங்கள். இதயத்திற்கு இதமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ள அவர், ஏற்கெனவே ஒன்றிய அரசுத் துறை / நிறுவனங்களின் பணி நியமனங்கள் நடந்தேறும் போது மாநில மொழிகளில் தேர்வு, தேர்வர்களுக்கு மாநில மொழி அறிவு, மாநில மட்டங்களில் தேர்வு உள்ளிட்டவற்றை அமலாக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் எனவும், தமிழ்நாட்டைச் சார்ந்தோரின் வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படுவதோடு தமிழ் மக்களுக்கான அலுவலக சேவைகளும் மக்கள் மொழியில் அமைவதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அகில இந்தியத் தேர்வு முறைமைகள் அமலில் உள்ள இடங்களில் மாநில வரையறைக்கு உட்பட்ட காலியிடங்கள் தனித்தனியே அறிவிக்கப்பட்டு ஒரே நேரத்தில் அகில இந்திய அளவில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும், ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கான நிலுவைக் காலியிடங்கள் உள்ளிட்டு அனைத்து காலி இடங்களும் நிரப்பப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









