ஈரான் மீது கடந்த சனிக்கிழமை அன்று முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈரான் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களிலும் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இதற்கிடையே, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் போன்றவை அமெரிக்காவிற்கு ஆதரவு அளித்துள்ளன. இந்தியாவும் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலுக்காக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகளும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் ஈரான் தனது தொடர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. மத்திய கிழக்கில் போர்பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், ஈரானைக் குறிவைத்து அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய குடியரசில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 787 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி உள்ளதால் பல்வேறு நாடுகள் தங்கள் வான்பரப்பை மூடியுள்ளன. இதனிடையே, அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், அரபு நாடுகளான ஓமன், குவைத் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஓமன் மன்னர் சுல்தான் ஹைதம் பின் தரிக் மற்றும் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் கலீத் அல் ஹமத் அல் முபாரக் ஆகியோருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பிரதமா் மோடி கவலை தெரிவித்ததோடு, அந்த நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தாா் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.







