தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வாக்களித்தார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளிக்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் – மதச்சார்பின்மை – மாநில உரிமைகள் – சமத்துவம் – சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




