வள்ளலார் மீது நம்பிக்கை உள்ள அனைவரையும் சனாதன சக்தியாக மாற்றுகின்ற முயற்சியை, ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள தனியார் மஹாலில் வள்ளலாரின் 200வது ஆண்டு ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, வள்ளலார் வாழ்ந்த மருதூர், கருங்குழி, மேட்டுக்குப்பம் சித்தி விளாகம், சத்யஞான சபை ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தார்.
பின்னர் வடலூரில் நடைபெற்ற வள்ளாரின் 200-வது ஆண்டு ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்துள்ளனர். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது நாடு உள்ளான போது தோன்றியவர் தான் வள்ளலார். சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்றும் அவர் கூறினார்.
வள்ளலார் பற்றிய ஆளுநரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், ஆளுநரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நமது செய்தியாளர் தாமரைகனிக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஆர்.என்.ரவி ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டர்.., சனாதன அடிப்படைவாதி… சாதி,சமயம், மீது நம்பிக்கை இல்லாதவர் வள்ளலார். வள்ளலார் மீது நம்பிக்கை உள்ள அனைவரையும் சனாதன சக்தியாக மாற்றுகின்ற முயற்சியில் ஆளுநர் இறங்கியுள்ளார். ஆளுநர் ஆர்.என் ரவி, பிரதமர் மோடி, அமித்ஷாவின் கருத்துகளுக்கு எதிரானவர் வள்ளலார். ஆர் என் ரவியின் பேச்சை விசிக கடுமையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் குழப்பத்தை உருவாக்க வேண்டும் ஜாதி மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த வேண்டும். சமூக நீதி அரசியலை பலவீனப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது.
மணிப்பூர் பற்றி எறிவதற்கு சனாதன கொள்கைகளின் வெறுப்பு அரசியல் தான் காரணம். மணிப்பூர் கலவரத்திற்கு அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். தமிழர்களாக போகாமல் இந்துக்களாக அணி திரட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். சனாதானம் என்ற சொல்லுக்கு நேரடியான பொருள் நிலையானது.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
திருமாவளவனுடன் நமது செய்தியாளர் தாமரைக்கனி நடத்திய கலந்துரையாலை பார்க்க….
- பி.ஜேம்ஸ் லிசா








