வள்ளலார் குறித்த ஆளுநரின் கருத்து முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை – அமைச்சர் தங்கம் தென்னரசு!

சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு தமிழ்நாடு நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு…

சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு தமிழ்நாடு நிதி மற்றும் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். வள்ளலார் சித்தி அடைந்த இடமான மேட்டுகுப்பம் பகுதியில் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார். அப்போது சனாதனத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என அவர் பேசினார். அவரது இந்த பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்ட எம்.பி.சு.வெங்கடேசன், வள்ளுவரும் வள்ளலாளரும் விழுங்கவே முடியாத கலகக் குரல்கள் மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக் குரல்கள் என்று பதிவிட்டிருந்தார்.

 

 

இந்த நிலையில், ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சமரச சுத்த சன்மார்க்க நெறிக்கும், சனாதன தர்மத்திற்குமான அடிப்படை வேற்றுமையைக் கூட அறிந்து கொள்ளாமல், வடலூர் வள்ளல் பெருமாள் வழிகாட்டிய நெறிமுறைகளை முற்றிலும் சிதைத்து சனாதனப் போர்வைக்குள் சன்மார்க்க நெறியை புகுத்தும் முயற்சியில், “தா்ம ரட்சராகப்“ புதிய அவதாரம் மேற்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஈடுபட்டிருக்கிறார்,

தமிழ்ப் பண்பாடும் – விழுமியங்களும் தனித்தியங்கும் தன் இயல்பினைக் கொண்டவை என்பதை பல்லாயிரமாண்டு தமிழ்ச் சமூக நாகரீகச் சுவடுகள் நமக்கு உணர்த்தி இருக்கின்றன.

ஒன்றிய அரசின் “தனிப்பெருங் கருணை“ ஏதோ ஒரு விதத்தில் வாய்க்கப் பெற்றுவிட்டதாலேயே ஆளுநர் மாளிகையை சனாதனக் கூடாரமாக மாற்றும் ஆளுநரின் கருத்துக்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியவை.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.