நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாள் இன்று

2009ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். கிரிக்கெட் வீரராக தன் வாழ்க்கையை தொடங்கிய விஷ்ணுவிஷால், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை…

2009ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால்.

கிரிக்கெட் வீரராக தன் வாழ்க்கையை தொடங்கிய விஷ்ணுவிஷால், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, விஷ்ணு விஷாலுக்கு சிறந்த அறிமுக நடிகர் விருதையும் பெற்று கொடுத்தது. முதல் படத்திலேயே அறிமுக நடிகருக்கான எடிசன் விருது கிடைத்ததால், அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனை தொடர்ந்து, பலே பாண்டியா என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்தார் விஷ்ணு விஷால். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

SRI பாலாஜி இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான “குள்ளநரிக்கூட்டம்” விஷ்ணு விஷாலுக்கு வெற்றி திரைப்படமாக அமைந்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.

சீனுராமசாமி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான நீர்பறவை, விஷ்ணு விஷால் திரைப்பட வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

2014 ல் RAMKUMAR ((கோபி)) இயக்கத்தில் வெளியான முண்டாசுப்பட்டி “ மீண்டும் விஷ்ணு விஷாலுக்கு வெற்றிப்படமாக அமைந்தது. நகைச்சுவை படமான முண்டாசுப்பட்டி விஷ்ணு விஷாலின் நடிப்பு திறனை வெளிப்படுத்திய படமாக அமைந்தது.

அதே ஆண்டில், சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான “ஜீவா” மீண்டும் விஷ்ணு விஷானுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் அரசியல் குறித்து பேசிய இந்த படம், விஷ்ணு விஷால் நடிப்பு திறனை ஒருபடி மேலே உயர்த்தியது. அதே நேரத்தில் ஜீவா படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆர் ரவிகுமார் இயக்கத்தில் 2015 இல் வெளியான “இன்று நேற்று நாளை” வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றிப்பெற்றது. டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அறிவியல் புனைவு திரைப்படம் இது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முண்டாசுப்பட்டி வெற்றியை தொடர்ந்து ராம்குமார், விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான ராட்சசன் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த படங்களிலேயே மிகப்பெரும் ஹிட் என்ற அந்தஸ்தை பெற்றது ராட்சசன் திரைப்படம். அந்த படத்தின் காட்சிகள், வசனம், இசை ஒவ்வொன்றும் தத்ரூபமாக எடுக்கப்பட்டது. நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விருது விழா, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் விழா என பல திரைப்பட விழாக்களில் கலந்துக் கொண்டு பல விருதுகளைப் பெற்றது.

தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வளம்வரும் விஷ்ணு விஷால் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பேட்மிடன் வீராங்கணை ஜ்வாலா கட்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.