இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது இன்றும் ஆஸி., ரசிகர்கள் இனவெறித் தாக்குதல் நடத்தியதன் காரணமாக போட்டி சில நிமிடங்கள் தடைப்பட்டது.
இதற்கு முன் இல்லாத அளவுக்கு நடப்புத் தொடரில், ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர்கள் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிட்னியில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளில் இருந்தே, சில ஆஸி., ரசிகர்கள் இந்திய வீரர்களான பும்ரா, சிராஜ் ஆகியோரை குறிவைத்து இன ரீதியாக இழிவுப்படுத்தியதாக தெரிகிறது.
ரசிகர்களின் கேலியும், கிண்டலும் மூன்றாவது நாளான நேற்றும் தொடர, ஆட்டம் முடிந்த பிறகு கேப்டன் ரஹானே, அஷ்வின் ஆகிய இருவரும் நடுவர்கள் பால் ரீஃபல் மற்றும் பால் வில்சன் ஆகியோரிடம் முறையாக புகார் அளித்தனர். அதேபோல், சிட்னி மைதான பாதுகாப்பு அதிகாரிகளிடத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், போட்டியின் நான்காம் நாளான இன்றும் ஆஸி., ரசிகர்கள் இந்திய வீரர்களை இன ரீதியாக கிண்டல் செய்ததையடுத்து, கவனத்தை ஈர்க்கும் வகையில் முகமது சிராஜ் தனது பவுலிங்கை நிறுத்தினார். தொடர்ந்து, இந்திய கேப்டன் ரஹானே, சிராஜிடம் பேசிய பிறகு, நடுவர்களிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
இதைத் தொடர்ந்து, மைதான பாதுகாப்பு அதிகாரிகள், சில ரசிகர்களை அங்கிருந்து வெளியேற்றிய பிறகே, ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
இந்தச் சூழலில், இனவெறி தாக்குதல் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள ஆஸி., கிரிக்கெட் வாரியம், “இனவெறி தூண்டும் வகையில் செயல்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்திய வீரர்களை குறிவைத்து இனவெறியைத் தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.
இரண்டாம் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுக்க, இந்தியாவுக்கு 407 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.
ஷுப்மன் கில் 31 ரன்களிலும், ரோஹித் ஷர்மா 52 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.