ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது விராட் கோலி பந்தை ஒற்றையில் கையில் கேட்ச் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 10 நாட்களுக்கு முன்பே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சென்று விட்டது. நேரடியாக சூப்பர்12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி வருகிற 23ம் தேதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இந்த போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கே.எல்.ராகுல் 57 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் என சிறப்பாக விளையாட 20 ஓவர்களில் இந்தியா 186/7 ரன்களை குவித்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய போதும், கடைசி 2 ஓவர்களில் மிக மோசமாக விக்கெட்களை பறிகொடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஓவரின் மூன்றாவது பந்தை பேட் கம்மின்ஸ் லாங் ஆனில் தூக்கி அடிக்க, பவுண்டரி லைனில் நிற்காமல் லைனிலிருந்து கொஞ்சம் முன்பாக நின்ற விராட் கோலி, சிக்ஸருக்கு சென்ற பந்தை ஒற்றை கையில் பிடித்து மிரட்டினார்.
விராட் கோலியின் கேட்ச்சை அனைவருமே வியந்து பார்த்தனர். விராட் கோலி பீல்டிங் செய்ததற்கு பின்னால் தான் வார்னர், பின்ச், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகிய ஆஸ்திரேலிய வீரர்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் விராட் கோலியின் கேட்ச்சை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். விராட்கோலியின் அந்த மிரட்டலான கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.







