ஓமலூர் அருகே 2019 ம் வருடம் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 60 வயது முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே எலத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மாற்று திறனாளியான இவருக்கு செவ்வந்தி என்ற மனைவியும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு 11 வயது மகள் இருக்கிறார். இவர் எலத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் 2019 ஆண்டு ஏப்ரல் மாதம் பள்ளி சிறுமியின் பெற்றோர்கள் கூலி வேலைக்கு சென்று விட்டனர். பள்ளி சிறுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது எலத்தூரில் உள்ள திம்மச்சி காட்டுவளவு பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ரங்கன் என்பவர் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மாலை சூரியன் மறையும் நேரமான ஆறு மணிக்கு ரங்கன், பக்கத்து வீட்டில் இருந்த பள்ளி மாணவியை, தனது தோட்டத்து வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதில் பயந்துபோன பள்ளி மாணவி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதையறிந்த ரங்கன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த பள்ளி சிறுமியின் தாய் செவ்வந்தி வந்து பார்த்த போது அங்கு நடந்தவைகளை பள்ளி மாணவி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாரிடம் செவ்வந்தி புகார் செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முதியவர் ரங்கன் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து ஓமலூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கில் இன்று போக்சோ நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி தீர்ப்பளித்தார் இதில் பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற முதியவர் ரங்கனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் 3000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார் இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்த முதியவரை தீவட்டிப்பட்டி போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.