டாஸ்மாக் பார் மறு டெண்டரிலும் முறைகேடு நடைபெற்றதாக தமிழ்நாடு மாநில டாஸ்மாக் பார் சங்கத்தின் துணைச் செயலாளர் இசக்கி துரை குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடு மாநில டாஸ்மாக் பார் சங்கத்தின் துணைச் செயலாளர் இசக்கி துரை பேட்டி :-
கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு 30 மாவட்டங்களுக்கான டாஸ்மாக் பார் டெண்டரில் முறைகேடு நடைபெற்றதால் சென்னை உட்பட 8 மாவட்டங்களைச் சேர்ந்த சங்கத்தினர் மற்றும் வியாபாரிகள் டெண்டரை புறக்கணித்தோம். இதனால் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி 8 மாவட்டங்களுக்கான மறு டெண்டர் நடத்தப்பட்டது.
மறு டெண்டரிலும் முறைகேடு நடைபெற்றதால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் திடீரென இன்று சென்னையில் 30-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார் கடைகளை அதிகாரிகள் மூடியுள்ளனர்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி டெண்டர் நிறைவடையும் நிலையில் முன்கூட்டியே அதிகாரிகள் இன்று கடையை பூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தமாக ஒருவரிடமே அனைத்து டெண்டர்களையும் கொடுத்து தற்பொழுது உள்ள வியாபாரிகளை அவரிடம் பெற்றுக்கொள்ள அழைப்புகள் வருகிறது. டாஸ்மாக் பாருக்கான டெண்டரை டாஸ்மாக் அலுவலகத்தில் பெற வேண்டுமா? வேறு எங்கு பெற வேண்டும் என எங்களுக்கு தெரியவில்லை.
அதிமுக ஆட்சியில் கூட பார் வைத்திருந்த திமுகவினருக்கு எந்த ஒரு சிறிய இடையூறும் கொடுக்கவில்லை.
மொத்த டெண்டரையும் ஒருவரே எடுத்து அனைவருக்கும் பங்கு கொடுக்கும் நோக்கத்தில் அதிகார மிரட்டலோடு செயல்படுகிறார்கள் என்று இசக்கி துரை தெரிவித்தார்.








