வலதுசாரி சித்தாந்தத்தை கடைபிடிப்பவர்கள் விநாயகர் சதுர்த்தியை திருவிழாபோல் கொண்டாடுவது வழக்கம். திராவிட கொள்கைகளை கடைபிடிப்பவர்கள் அதனை விரும்புவதில்லை. இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொந்த தொகுதியான கொளத்தூரில் விநாயகர் சதுர்த்தியை வெகு விமர்சையாக கொண்டாட பாரதிய ஜனதா கட்சி முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இந்துக்களின் பண்டிகைகளை மட்டும் புறக்கணிக்கிறார். இது தவறு என்பதை பலமுறை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை.
அவர்தான் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடவில்லை என்றாலும், அவரது தொகுதியில் உள்ள மக்கள் விநாயகர் சதுர்த்தியை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அப்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாங்கள் வீடு வீடாக விநாயகர் சிலைகளை கொடுக்கவுள்ளோம். இந்த ஆண்டு 1008 விநாயகர் சிலைகளை கொடுக்கவுள்ளோம். அதுமட்டுமின்றி இந்து முன்ணனி சார்பில் நடைபெறும் விநாயகர் விசர்ஜன விழாவில் கலந்து கொண்டு திமுக அரசு இந்து பண்டிகளை எவ்வாறு புறக்கணிக்கிறது என்பது குறித்து பேசவுள்ளோம் என்றார்.
இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், நாத்திகவாதியான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் ஆயிரத்து எட்டு விநாயகர் சிலைகளை வீடு வீடாக கொடுக்கவுள்ளோம். இதனை திமுக எப்படி தடுக்கிறது என பார்ப்போம் எனக் கூறியுள்ளார்.
இவரது இந்த அறிவிப்பை தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் விரும்பதகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளனர். மதத்தின் பெயரால் தேவையற்ற மோதல்கள் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் கழுகு பார்வையில் தொகுதி முழுக்க காவல்துறையின் சுற்றி வருகின்றனர்.
இராமானுஜம்.கி









