சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துணைவேந்தர்கள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, ரகுபதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மெய்யநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நான் முதல்வன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் சிறந்த இடத்தைப் பிடிப்பது, பாடத்திட்ட மாற்றம், மாநில கல்விக்கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதுமைப் பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துதல், பேராசிரியர்கள் – மாணவர்கள் விகிதத்தை சரியாக கடைபிடித்தல் உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய தலைமைச் செயலாளர் இறையன்பு, மாணவர்கள் ஆராய்ச்சியில் அதிகம் கவனம் செலுத்திட வேண்டும் என கூறினார். அனைத்து தளங்களிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களும் சீர்மிகு பல்கலைக்கழகங்களாக உருவாக வேண்டும் அதற்காக அனைவரும் உழைத்திட வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் கேட்டுக்கொண்டார்.
– இரா.நம்பிராஜன்








