விநாயகர் சதுர்த்தி; கொழுக்கட்டை இவ்வளவு வெரைட்டியா!

விநாயகர் சதுர்த்தி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது விதவிதமான கொழுக்கட்டைகள் தான். இனிப்பு கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொழுக்கட்டைகளை அனைவரும் விரும்பி உண்ணுவர். இந்த விநாயகர் சதுர்த்திக்கு…

விநாயகர் சதுர்த்தி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது விதவிதமான கொழுக்கட்டைகள் தான். இனிப்பு கொழுக்கட்டை, காரக் கொழுக்கட்டை என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொழுக்கட்டைகளை அனைவரும் விரும்பி உண்ணுவர். இந்த விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷல் கொழுக்கட்டை ரெசிபீக்கள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்…

1. அரிசி மாவு கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு 1 டம்ளர், உப்பு- தேவையான அளவு, தேங்காய்- 1/4 மூடி, பெருங்காயம்- சிறிதளவு

தாளிக்க: எண்ணெய்- 1 தேக்கரண்டி, கடுகு- 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி, வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி, மிளகாய்வற்றல்- 1, பச்சை மிளகாய்- 1, கறிவேப்பிலை- 1 இணுக்கு, பாசிப்பருப்பு- ஒரு கைப்பிடி.

அண்மைச்செய்தி: முதலமைச்சர் தொகுதியில் 1008 விநாயகர் சிலைகள் – பாஜக

செய்முறை: 1. அரிசி மாவைச் சிவக்க வறுக்கவும். 2. தண்ணீரை (ஒன்றுக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் கணக்கு) சுட வைத்து உப்பு சேர்த்து வதக்கிய மாவில் சேர்க்கவும்.
3. தாளிப்பு பொருட்களைச் சேர்த்து மாவில் கிளறவும் (பாதியை இப்போதும் கொழுக்கட்டைகள் வெந்து வந்த பிறகு மீதியைச் சேர்க்க வேண்டும்). 4. மாவை உருண்டைகள் பிடித்து இட்லித் தட்டுகளில் பரப்பி வேகவிடவும். 5. ஒரு கைப்பிடி பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். 6. கொழுக்கட்டைகள் வெந்து வந்ததும் தாளிப்புப் பொருட்களின் பாதியையும், வறுத்தப் பாசிப்பருப்பையும், தேங்காய்த் துருவலையும் போட்டுக் கலந்து கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும். 7. சுவையான அரிசிமாவு கொழுக்கட்டைக்குத் தக்காளிச் சட்னி, சாம்பார், மிளகாய்ப்பொடி, தொக்கு வகைகள் சிறந்த காம்பினேஷன்.

2. அவல் கொழுக்கட்டை

தேவையானவை: வெள்ளை அவல் அல்லது சிவப்பு அவல் – 2 டம்ளர், தேங்காய்த் துருவல்- 3 தேக்கரண்டி, உப்பு- தேவையான அளவு, தண்ணீர் – சிறிதளவு.

தாளிக்க: நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி, வெள்ளை உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி, பச்சைமிளகாய் – 2, காயம்- சிறிதளவு, கறிவேப்பிலை- 1/2 இணுக்கு.

செய்முறை: 1. அவலைத் தண்ணீர் விட்டு 15 நிமிடங்கள் ஊற விடவும். 2. ஊறிய அவலைக் கைகளால் நன்றாக மசித்துக் கொள்ளவும். உப்பு சேர்த்துப் பிசையவும்
3. அடுப்பை ஏற்றி வாணலியில் தாளிப்பு பொருட்களைத் தாளித்துக் கொண்டு மசித்த அவலைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும். 4. தேங்காய்த் துருவலைப் போட்டு இறக்கி ஆறவிட்டு உருண்டைகள் பிடித்து இட்லி குக்கரில் வேகவிடவும் (ஐந்தே நிமிடங்கள் போதுமானது). 5. கொழுக்கட்டைகள் வெந்ததும் தக்காளிச் சட்னி அல்லது புதினாச் சட்னியுடன் பரிமாறலாம். 6. வெங்காயம், கேரட் துருவிப் போட்டும் செய்யலாம்.
7. வெறும் தண்ணீரில் ஊற வைக்காமல் புளித்தண்ணீரில் ஊற வைத்தால் புளி அவல் கொழுக்கட்டை, புளி நீரில்லாமல் மோரில் ஊற வைத்துச் செய்தால் மோர் அவல் கொழுக்கட்டை தயாராகிவிடும்.

3. கார கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்: பச்சரிசி மாவு- ஒரு கிண்ணம், காரப்பொடி- 1 தேக்கரண்டி,
தேங்காய்- 1/4 கிண்ணம், எண்ணெய் – 2 தேக்கரண்டி, கடுகு – 1 டீஸ்பூன், வெள்ளை உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், கறிவெப்பிலை – 1 இணுக்கு, காயம் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: 1. பச்சரிசி மாவை ஒரு வாணலியில் பச்சை வாடை போக சிறிது வறுத்துக் கொள்ளவும். 2. வறுத்த மாவுடன் உப்பு, காயம், காரப்பொடி போட்டு கலந்து மிதமான தீயில் வதக்கவும். 3. 3/4 டம்ளர் நீரைச் சுட வைக்கவும் 4. எண்ணெயில் கடுகு, வெள்ளை உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சுடு நீருடன் சேர்க்கவும். 5. சுடு தண்ணீரை மாவுடன் சிறிது சிறிதாகக் கலக்கவும். துருவின தேங்காயைச் சேர்த்து நன்றாக மாவைக் கிளறவும். 6. மாவை உருண்டைகளாக உருட்டி இட்லி குக்கரில் தட்டில் வேக வைத்து எடுக்கவும். சுவையான கார கொழுக்கட்டை தயார்.

4. ஓட்ஸ் அம்மிணிக் கொழுக்கட்டை

செய்முறை: ஓட்ஸ்- 1 கப், பச்சரிசிமாவு- 1 கப், தேங்காய்த்துருவல்- 1/4 கப், உப்பு- தேவையான அளவு, காயம்- சிறிதளவு.

தாளிக்க: எண்ணெய்- 1 தேக்கரண்டி, கடுகு- 1 தேக்கரண்டி, கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி, வெள்ளை உளுத்தம்பருப்பு- 1/2 தேக்கரண்டி, கறிவேப்பிலை- 1 இணுக்கு, மிளகாய்த்தூள்- சிறிதளவு, மிளகுத்தூள்- சிறிதளவு, இட்லி மிளகாய்ப்பொடி- 1/2 தேக்கரண்டி.

செய்முறை: 1. மிக்ஸியில் ஓட்ஸைத் திரித்துக் கொள்ளவும். 2. திரித்த ஓட்ஸ், அரிசி மாவைப் பச்சை வாடைப் போக வதக்கிக் கொண்டு உப்பு, காயம் சேர்க்கவும்.
3. வழக்கமாகக் கொழுக்கட்டைக்குச் செய்வது போல சுடுதண்ணீரைச் சேர்த்துக் கொழுக்கட்டை மாவு பதத்திற்கு ஆக்கவும். 4. தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.
5. அடுப்பை அணைத்துவிட்டு சூடு லேசாக ஆறியதும் உருண்டைகள் ஆக்கவும்.
6. இட்லிப்பானையில் தட்டுக்களில் எண்ணெய் தடவிக் கொழுக்கட்டைகளை அடுக்கவும். 7. ஆவியில் வேகவிடவும். 8. அவை வெந்து கொண்டிருக்கும்போது இன்னொரு வாணலியில் தாளிப்பு பொருட்களைத் தாளித்துக் கொள்ளவும். 9. கொழுக்கட்டை தயாரானதும் ஓரிரு நிமிடங்கள் வெளியே வைத்து சூடு ஆறவிடவும்.
10. தாளித்தப் பொருட்களுடன் கொழுக்கட்டைகளைப் பிரட்டி எடுக்கவும். 11. அப்போது மிளகாய்த்தூள், மிளகுத்தூள், இட்லி மிளகாய்ப்பொடி தூவிப் பிரட்டவும். சுவையான ஓட்ஸ் அம்மிணி கொழுக்கட்டை தயார்.

5. உளுத்தம் கொழுக்கட்டை

தேவையானவை: பச்சரிசி மாவு – 3 டம்ளர், உளுத்தம் பருப்பு – 1 டம்ளர் (100 கிராம்),
மிளகாய்வற்றல் – 6, தேங்காய் – கால்மூடி, உப்பு – தேவையான அளவு.

தாளிக்க: எண்ணெய் – 2 தேக்கரண்டி, கடுகு – ஒரு தேக்கரண்டி, உளுந்து – ஒரு தேக்கரண்டி, பச்சை மிளகாய் – 2, இஞ்சி – ஒரு துண்டு, கறிவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை: 1. உளுத்தம் பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்து கொஞ்சம் நீர் சேர்த்து மிளகாய் வற்றலுடன் உப்பும் சேர்த்து கரகரப்பாகவும், கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும். 2. அரைத்த உளுந்தை இட்லித்தட்டுகள் அல்லது மைக்ரோவேவில் (5 நிமிடங்கள்) வேகவிட்டு வேறொரு வாணலியில் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி உதிர்க்கவும். 3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, பச்சைமிளகாய் சின்ன சின்னதாக நறுக்கி, இஞ்சி போட்டு தாளித்துக் கொள்ளவும்.
4. பிறகு தாளித்ததில் உளுத்தம் மாவைக் கொட்டி கிளறி பொலபொல வென்று பூரணம் தயார் செய்யவும். உளுத்தம்மாவில் தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும்.

மேல்மாவு செய்ய: 1. ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். 2. பச்சரிசி மாவை பச்சை வாடை போக வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவை கொட்டி கொதித்தத் தண்ணீரை மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாக பிசையவும். 3. பிசைந்த மாவை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். உருட்டும்போது எண்ணெய் தொட்டு உருட்டி வாழை இலை அல்லது ஜிப்லாக் கவரில் உருண்டையை வைத்து அப்பளம் வடிவில் தட்டிக் கொள்ளவும்.

கொழுக்கட்டை செய்ய: 1. தட்டிய மாவில் ஒரு தேக்கரண்டி பூரணத்தை நடுவில் வைத்து மாவை சமமாக மடித்து ஓரங்களை ஒட்டவும். இதேபோல் அனைத்து உருண்டைகளையும் கொழுக்கட்டைகளாகத் தயாரித்துக் கொள்ளவும். 2. பிறகு இட்லி குக்கரில் கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து பரிமாறவும்.
3. சுவையான, ஆரோக்கியமான உளுத்தம் கொழுக்கட்டை தயார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.