வீட்டில் பதுக்கி வைத்து மாணவர்களுக்கு கஞ்சா,மது விற்பனை- கையும் களவுமாக கைது செய்த காவல்துறை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம்…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா, எரிச்சாராயம் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து திண்டிவனம் டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கிடங்காலன் என்ற சரண்ராஜ் வீட்டில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, தமிழ்மணி உள்ளிட்ட போலீசார் அவரது வீட்டில் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்படிருந்த 1கிலோ அளவிலான கஞ்சா, மூட்டை, மூட்டையாக எரிசாராயம் , ஏராளமான மது பாட்டில்கள், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

சரண்ராஜ் பல நாட்களாக  தனது வீட்டை பார் போல நடத்தி வந்துள்ளார்.மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களையும், வாட்டர்பாட்டில், தண்ணீர் கிளாஸ் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.இதுகுறித்து பலமுறை புகார் வந்தும் சரண்ராஜை பிடிக்க போலீசார் சென்றால் கழுத்தை கத்தியால் கிழித்து கொள்வது போன்று நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் பல நாட்களாக போலீசார் நோட்டமிட்டு சரண்ராஜை கைது செய்தனர்.

அவரை விசாரித்ததில் விழுப்புரத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ்ர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டதும், மாணவர்கள் அதிகமாக கூடும் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரித்து வரும் போலீசார் வேறு யாருக்கேனும் இதில் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.