சென்னை எல்.ஐ.சி கட்டடத்தில் திடீரென தீப்பற்றியதை அடுத்து, தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள எல்.ஐ.சி கட்டடம், சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 70 ஆண்டுகளைத் தாண்டியும் கம்பீரமாக நிற்கும் இந்த கட்டடம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
இந்நிலையில் இன்று இந்த எல்.ஐ.சி கட்டடத்தின் மேல் தளத்தில் திடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்க போராடினர்.
எல்.ஐ.சி கட்டடத்தின் பெயர் பலகையில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்கு காரணம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். மொத்தம் 6 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிநவீன ராட்சத கிரேன் மூலம் தீயணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அரைமணி நேர போராட்டத்திற்குப் பின்னர், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அலுவலகத்தில் எந்த ஊழியர்களும் இல்லை என்றும், தீ விபத்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.








