சித்தா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் தனது அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் உடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் அருண்குமார். இவர் அடுத்தடுத்து விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி மற்றும் சிந்துபாத் ஆகிய படங்களை இயக்கினார். சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான சித்தா திரைப்படம் பாராட்டுகளையும் வசூலையும் குவித்துள்ளது. குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உருவாகியுள்ள ‘இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
சித்தா திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 30 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்போது படத்துக்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. நல்ல படம் என்ற வாய்வழி விமர்சனங்கள் வழியாகவே இந்த படத்துக்கு விளம்பரம் கிடைத்து இப்போது பிக்கப் ஆகியுள்ளது.
இந்நிலையில், அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாகவும் இப்படத்தின் முதல்கட்ட பணிகள் துவங்கிய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை இருமுகன் படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ் தயாரிக்க உள்ளாராம். கோலார் தங்க வயலில் நடந்த உண்மையைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.







