வாரிசு இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த வீடியோ ட்விட்டரில் 1.1 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே, தீ தளபதி உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற விஜய் பட இசை வெளியீட்டு விழா என்பதால், நேரு உள்விளையாட்டு அரங்கம் முன்பு அதிகளவில் ரசிகர்கள் குவிந்தனர்.
இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா தம்பதி கலந்து கொண்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள், செல்போன் டார்ச் லைட்டை, ஒரே நேரத்தில் ஒளிரச் செய்தனர். விழாவிற்கு வருகை தந்த விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட விஜய், ரசிகர்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
#EnNenjilKudiyirukkum pic.twitter.com/4rbooR4XLa
— Vijay (@actorvijay) December 24, 2022
நடிகர் விஜய் மேடையில் இருந்தவாறு ரசிகர்களுடன் செல்பி வீடியோ எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில், என் நெஞ்சில் குடியிருக்கும் என்ற ஹேஷ்டாக்குடன் பகிர்ந்தார். அந்த வீடியோ ட்விட்டரில் 258 ஆயிரம் லைக்குகள், 92 ஆயிரம் ரீட்வீட்டுகள், 1.1 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.







