தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது 71-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியில் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார்.
உடல் நிலை காரணமாக ஓய்வில் இருக்கும் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களை சந்திப்பார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரசிகர் மன்ற காலம் முதல் விஜயகாந்துடன் பயணிப்பவர்களும், தேமுதிக மாவட்டச் செயலாளர்களும் விஜயகாந்தை நேரில் சந்திக்க சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் குவிந்தனர்.
இதனை அடுத்து கட்சி தொண்டர்களை விஜயகாந்த் நேரில் சந்தித்தார்.அப்போது இருக்கையில் அமர்ந்தவாறு தொண்டர்களை பார்த்து விஜயகாந்த் கை அசைத்தார். இதனை பார்த்து தொண்டர்கள் ஆரவாரித்தனர்.
அப்போது விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்த ’படைத் தலைவன்’ திரைப்படத்தின் பெயர் மற்றும் படத்தின் முன்னோட்ட காட்சிகளை விஜயகாந்த் வெளியிட்டார்.
இதனை அடுத்து விஜயகாந்தின் மனைவியும் தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
விஜயகாந்த் தற்போது நலமுடன் இருக்கிறார்.வாராரு வாராரு அழகர் பாட்டு பாடல்களைக் கேட்டு விஜயகாந்த் டான்ஸ் ஆடுகிறார். உண்மை தொண்டனின் வாழ்த்து விஜயகாந்தை நூறாண்டு வாழ வைக்கும். அதோடு நமது முரசு நாளை தமிழக அரசு.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.







